Last Updated : 17 Jan, 2020 12:56 PM

 

Published : 17 Jan 2020 12:56 PM
Last Updated : 17 Jan 2020 12:56 PM

விழுப்புரம் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமி மீட்பு: துரிதமாக செயல்பட்ட இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு

விழுப்புரம் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமியை இளைஞர்களே ஒன்று சேர்ந்து துரிதமாக செயல்பட்டு மீட்ட காட்சி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் அருகே சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் இந்திரா காந்தி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சரோஜா என்ற பயனாளிக்கு கட்டப்படும் வீடுக்கான கட்டுமானப் பணிக்கு சுமார் 7 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்ற ஆட்சேபணையை பொதுமக்கள் தெரிவித்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், கடந்த சில நாட்கள் முன்பு அப்பகுதியில் விளையாட்டிக் கொண்டிருந்த அதே கிராமத்ததைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது மகள் கோபிணி, தவறி 7 அடி குழிக்குள் விழுந்துள்ளார். குழந்தையின் அழுகை சத்ததை கேட்ட, அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தை குழிக்குள் தறவி விழுந்ததை அறிந்தனர்.

உடனே, குழந்தையின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குழி சற்று குறுகளாக இருந்ததால், உள்ளே இறங்கி மீட்பது சிரமமானது. இதையடுத்து, சிறுமி சிக்கிய குழிக்கு அருகிலேயே மற்றொரு குழி வெட்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.

துரிதமாக சமயோசிதமாக செயல்பட்ட அந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதற்கிடையில், மீட்புப் பணியின் கடைசி நிமிடக் கட்சிகளை, அப்பகுதியில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வீடியோவாக நேற்று மாலை வெளியிட்டார். பதைபதைக்க வைக்கும், அந்த பரபரப்பான கடைசி நிமிடக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெகுவேகமாக பரவி வருகிறது.

இது குறித்து காவல்துறையில் விசாரித்தபோது, குழிக்குள் விழுந்த சிறுமியை அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களே விரைவாக மீட்டு விட்டதால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்தது.

இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x