Published : 17 Jan 2020 09:00 AM
Last Updated : 17 Jan 2020 09:00 AM
முதல்வர் பழனிசாமி தமது சொந்த ஊரிலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் தனது சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி பொங்கல் வைத்து கொண்டாடினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருடன் சென்றார். அங்கு ஊர் பொதுமக்கள் சார்பில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரில் உள்ள முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் முதல்வர் பங்கேற்றார். கோயில் மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கல் வைத்து, ஊர் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பூக்களால் நிரப்பப்பட்ட உறி பானையை அடித்து, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு மாலை அணிவித்து, பழம், வெல்லம், தேங்காய் பொருட்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடந்த தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகளை முதல்வர் குடும்பத்தினருடன் கண்டு களித்தார். பின்னர், தனது தாயார் தவசாயி அம்மாளிடம் ஆசி பெற்று, சேலம் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டுக்கு முதல்வர் திரும்பினார்.
சமத்துவப் பொங்கல்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினார்.
இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட ஆண்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டியும் பெண்கள் அனைவரும் பாரம்பரிய உடை யானசேலையும் அணிந்து வந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
மேலும் இவ்விழாவில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், இசை கச்சேரி, கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்த சமத்துவ பொங்கல் விழாவை நமது இல்லங்களில் நடக்கும் விழாவாக பார்க்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும்போது எல்லா இடங்களிலும் திமுகவெற்றி பெறுவது உறுதி. சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற 21 இடங்களில் ஆளுங்கட்சி பெற்றிருந்த தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பல முறையற்ற செயல்கள் நடந்திருந்தாலும், அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும் தமிழகத்தில் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment