Published : 03 Aug 2015 12:19 PM
Last Updated : 03 Aug 2015 12:19 PM
தற்காப்பு கலை விளையாட்டுகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பென்காக் சிலாட் (Pencak Silat) என்ற விளையாட்டில் தூத்துக்குடி கல்லூரி மாணவர் ஆண்டனி ரெட்லின் சாதனை படைத்து வருகிறார். முதல் தேசிய போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று, சர்வதேச போட்டியில் பங்கேற்க அடுத்த மாதம் மலேசியா செல்கிறார்.
கராத்தே, சிலம்பம், மல்யுத்தம், ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ போன்ற பல்வேறு தற்காப்பு கலை சார்ந்த விளையாட்டுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
பென்காக் சிலாட்
இந்த வகையில் தற்காப்பு விளையாட்டில் ‘பென்காக் சிலாட்’ என்ற புதிய விளையாட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விளையாட்டு, விளையாடப்பட்டு வந்தாலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தற்காப்பு கலை விளையாட்டுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜூடோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு கலை விளையாட்டுகளின் கலவையாக இந்த விளையாட்டு விளங்குகிறது.
மாணவர் சாதனை
புதிதாக அறிமுகமான இந்த விளையாட்டில் தூத்துக்குடி பொறியியல் மாணவர் ஆண்டனி ரெட்லின்(18) சாதனை படைத்து வருகிறார். தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரத்தை சேர்ந்த இவர், கீழ வல்லநாட்டில் உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆண்டனி ரெட்லின் பள்ளி பருவத்தில் இருந்தே ஜூடோ, மல்யுத்தம், கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த விளையாட்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 30 பதக்கங்களை வென்றுள்ளார். மல்யுத்தம் போட்டியில் 2 முறை தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கியதால் பென்காக் சிலாட் அவருக்கு எளிதாக அமைந்துவிட்டது. இந்த விளையாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதை அறிந்து கடந்த சில மாதங்களாக பென்காக் சிலாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆர்வம் தான் முதலாவது தேசிய போட்டியிலேயே அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளது.
தங்கப்பதக்கம்
மாணவர் ஆண்டனி ரெட்லின் ‘தி இந்து’ நாளிதழிடம் கூறியதாவது:
தேசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டி கன்னியாகுமரியில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களை சேர்ந்த 350 வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 15 பேர் கலந்து கொண்டோம். அதில் 6 பேருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இதில் நானும் ஒருவன்.
இதன் மூலம் மலேசியாவில் செப்டம்பர் 13 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மலேசியா போட்டியில் வென்றால் 2016-ல் நடைபெறும் சர்வதேச கடற்கரை விளையாட்டு, 2018 ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு ஆகியவற்றில் பங்கேற்க முடியும்.
ஒலிம்பிக் கனவு
இதற்காக தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறேன். தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள சாய் அகடாமி மூலம் தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாஸ்டர் ஆர். முத்து சங்கர்குமார் என்னை ஆர்வப்படுத்தினார். தினமும் காலை 6 மணி முதல் 7.15 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் 6 மணி முதல் 9 மணி வரையும் பயிற்சி செய்வேன்.
மற்ற தற்காப்பு கலைகளில் எனக்கு நல்ல பழக்கம் இருப்பதால் இந்த விளையாட்டில் எளிதாக ஜெயிக்க முடிகிறது.
விளையாட்டு ஒதுக்கீட்டில் தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரி நிர்வாகமும் என்னை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறது. தேசிய போட்டியில் பங்கேற்க சென்ற போது அனைத்து செலவுகளையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது.
மலேசிய போட்டியில் வென்று ஆசிய, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும். தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ என்றார் மாணவர் ஆண்டனி ரெட்லின்.
தற்காப்பு கலைகளின் கலவை
அவருக்கு பயிற்சியளித்து வரும் மாஸ்டர் ஆர். முத்து சங்கர்குமார் கூறும்போது, ‘ஜூடோ, மல்யுத்தம், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ போட்டிகளின் கலவையாகவே பென்காக் சிலாட் அமைந்துள்ளது. இந்த விளையாட்டுக்கு கருப்பு கலர் ஆடை சீருடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரும் 2018-ல் நடைபெறும் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்த விளையாட்டு இடம்பெறவுள்ளது. தூத்துக்குடி மாணவர்கள் இந்த விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். தேசிய அளவில் தற்போது பதக்கம் வென்றுள்ளனர். விரைவில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவிப்பர்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT