Published : 17 Jan 2020 07:07 AM
Last Updated : 17 Jan 2020 07:07 AM

அவனியாபுரம், பாலமேட்டில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு; அடங்க மறுத்த காளைகளை பாய்ந்து அடக்கிய வீரர்கள்: கார், மோட்டார் சைக்கிள் உட்பட ஒன்றரை கோடி ரூபாய்க்கு பரிசு மழை

மதுரை

கி.மகாராஜன் / ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி, கோவை, கரூர், புதுக்கோட்டை, நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 641 காளைகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

14 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதல் பரிசு பெற்றார். 13 காளைகளை அடக்கிய மதுரை சோலை அழகுபுரம் மாடுபிடி வீரர் பரத்குமார் இரண்டாவது பரிசும், 10 காளைகளை அடக்கிய முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறந்த காளைகளில் புதுக்கோட்டையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவரின் காளை முதல்பரிசு பெற்றது. வில்லாபுரம் கார்த்திக் காளைக்கு 2-வது பரிசு வழங்கப்பட்டது.

பாலமேடு

மதுரை மாவட்டம் பாலமேட்டில் மஞ்சள் மலை சாமி ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 700 காளைகளும், அவற்றை அடக்க 930 மாடுபிடி வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். காளைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதால் அவற்றைக் காளை உரிமையாளர்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவே பாலமேட்டில் குவிந்தனர்.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மாடுபிடி வீரர்கள், ஒவ்வொரு சுற்றிலும் 75 பேர் கொண்ட குழுக்களாக ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை களம் இறக்கப்பட்டனர்.

வாடிவாசல் வழியே காளைகளை விழாக் குழுவினர் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிட்டனர். வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை அதன் திமில்களைப் பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்க ஆரம்பித்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றால் அந்தக் காளைகள் பிடிபடாத மாடுகளாக அறிவித்து மாட்டின் உரிமையாளருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், அவர்கள் நின்று விளையாடி பார்வையாளர்களைக் கவர்ந்த அடிப்படையில் தங்கக் காசு, வெள்ளிக் காசு, பைக், குக்கர், மின்விசிறி, பட்டுச் சேலை, பீரோ, டிவி, கட்டில், சைக்கிள் உட்பட ரூ.1 கோடிக்கு மேலான 500 வகையான பரிசுகளை விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து அடக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. அவர்களை பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

சில காளைகள் வாடிவாசல் முன்பு நின்று காலால் மண்ணைக் கிளறி புழுதி பறக்கச் செய்தன. இக்காளைகள், 'என்னை அடக்கிப் பாரு' என்ற தோரணையில் மாடுபிடி வீரர்களை மிரள வைத்தன. வீரர்கள் தொடவே அஞ்சிய அந்தக் காளைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்எல்ஏ, விஐபிகள் சிலர் அவ்வப்போது தங்கள் பெயரில் பல சிறப்புப் பரிசுகளை வழங்கினர். இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் கார் பரிசு வழங்கினார்.

போட்டியில் 40 பேர் வரை படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கு தயாராக இருந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை குழுவினர் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன், டிஐஜி ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் தலைமையில் 7 ஏடிஎஸ்பிக்கள் மற்றும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரிய சூரியூரில்..

இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் பெரிய சூரியூர் புதுக்குளம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் க.சிவராசு தொடங்கி வைத்தார்.

610 காளைகள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 345 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எஞ்சிய 343 பேர் 5 குழுக்களாக களத்தில் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியின்போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர், காளை உரிமையாளர்5 பேர், பார்வையாளர்கள் 14 பேர் என 29 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x