Published : 16 Jan 2020 06:00 PM
Last Updated : 16 Jan 2020 06:00 PM
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. இன்றைய ஜல்லிக்கட்டில் 676 காளைகள் களம் கண்டன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1,2,3 தேதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.
அந்த வரிசையில், அவனியாபுரத்தில் தை 1-ம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
லேசான தடியடியுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு..
முறைப்படி உடல்தகுதிச் சோதனை, முன்பதிவு செய்து டோக்கன் பெற்று வாடிவாசல் வரிசையில் நின்ற காளைகளுக்கு நடுவில் திடீரென்று டோக்கன் பெறாத காளைகளை உள்ளே அனுப்ப முயன்றோர் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர், ஆட்சியர், ஐஜி, எஸ்.பி. முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கோயில் காளைகள் அவிழ்த்துவிட்ட பின்னர் போட்டிக்கான காளைகள் களமிறக்கப்பட்டன. மொத்தம் 700 காளைகள், 936 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனால், நிறைய காளைகள் களமிறக்கப்பட வேண்டியிருந்ததால் போட்டியின் கால நேரம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு சில சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இன்றைய போட்டியில் கேலரி பகுதியில் அனைத்து சமூக பிரதிநிதிகள் சேர்ந்து அமரும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு:
16 காளைகள் அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக மாருதி சுசுகி இக்னிஸ் கார் வழங்கப்பட்டது, 13 காளைகள் அடக்கிய ராஜா என்ற இளைஞருக்கு இரண்டாம் பரிசாக டிவிர்ஸ் விக்டர் பைக் வழங்கப்பட்டது. 10 காளைகள் அடக்கிய கார்த்தி என்ற இளைஞர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
இதுதவிர போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா தொடங்கி வெள்ளிக் காசு, தங்கக் காசு, பீரோ என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
ரூ.1 லட்சம் மதிப்பிலான பசு பரிசு..
நாட்டின பசுமாடு, காளைகள் வளர்ப்பை ஊக்குவிக்க, அதன் இனத்தை பெருக்கவும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கன்றுடன் கூடிய நாட்டு பசு மாட்டை விழாக்குழுவினர் முதல் முறையாக வழங்கியது பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார், பைக்கு போன்ற பரிசுகளுடன் நாட்டின பசுமாடுகள், காளைகள் வளர்ப்பையும், அதன் இனத்தை பெருக்கவும் நாட்டின பசுமாடுகளை பரிசாக வழங்க வேண்டும் கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ போன்ற சமூக வலைதளங்கில் கோரிக்கை வைத்து, அதை அதிகளவு பகிர்ந்தனர்.
இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்த பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் நேற்று, போட்டியில் வெற்றிப்பெற்ற சிறந்த காளைக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டின பசு மாட்டை பரிசாக வழங்கினர்.
நாட்டின காளை, பசு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், அதன் இனத்தை பெருக்கவும், பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடங்கி வைத்த இந்த புது முயற்சிக்கு ஜல்லிக்கட்டுப்போராட்ட இளைஞர்கள், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பாலமேடு கால்நடை மருத்துவர் சுரேஷ் கூறுகையில், ‘‘பரிசாக வழங்கப்பட்ட நாட்டின பசு காங்கேயம் மயிலை பசு வகையை சேர்ந்தது. அதனுடன் வழங்கப்பட்ட கன்றுக் குட்டியும் பசுக் கன்று. அதனால், நாட்டின பசு, காளைகளை உற்பத்தி செய்ய இந்த பரிசு காளை வளர்ப்போருக்கு உதவியாக இருக்கும். இந்த காங்கேயம் நாட்டின பசு, ஏ-2 ரக பாலை கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்டினம். காங்கேயம் காளைகளை உழவு, வண்டி மாடு மற்றும் பல்வகை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தலாம், ’’ என்றார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும்..
இந்த நாட்டின பசு மாடு கோரிக்கையை முதலில் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டவரும், இன்று ஜல்லிக்கட்டில் பரிசாக வழங்கப்பட்ட நாட்டின பசுவையும், அதன் கன்றுவையும் ‘ஸ்பான்சர்’ வழங்கிய பொன்குமார், கூறுகையில், ‘‘ ஜல்லிக்கட்டுப்போராட்டம், வெற்றிக்கு பின்னால் நாட்டுமாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உயர்ந்த நோக்கமும், விருப்பமும் இருந்தது. அதை போராட்டத்தில் கண்கூடாக நாங்கள் பார்த்தோம்.
ஆனால், போட்டியில் வெற்றிப் பெறுகிறவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தால் மட்டுமே பார்வையாளர்களையும், போட்டியில் பங்கேற்பார்களையும் கவர வேண்டும் என்ற எண்ணம் போட்டி நடத்துவோரிடம் இருந்தது.
அதனால், நாட்டு மாடுகளை பாதுகாக்க நாட்டின பசு மாடுகளையும் பரிசாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாலமேடு விழா ஏற்பாட்டாளர்களிடம் எடுத்து சொன்னோம். அவர்கள் புரிந்து இந்த ஆண்டு முதல் சிறந்த காளைக்கு நாட்டின பசு மாடு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே கோரிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக வரும் காலங்களில் அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்பட அனைத்து ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் நாட்டின பசு மாடுகளை பரிசாக வழங்க விழா ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு ஸ்பான்சர் செய்ய நிறைய பேர் காத்திருக்கின்றனர், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT