Published : 16 Jan 2020 03:21 PM
Last Updated : 16 Jan 2020 03:21 PM
காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் கவலையில்லை என்று கூறிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, தோழமை சரியில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் முதல்வராவதற்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "காங்கிரஸ் கட்சிக்கு தோழமையைப் பற்றி யாரும் சொல்லி கொடுக்க அவசியம் இல்லை. தோழமை சரியில்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றியதில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லாதபோது கூட கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி சோனியா காந்தியால் கொடுக்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை துரைமுருகன் சரியாக படிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி குறித்தும், கூட்டணி தர்மம் குறித்தும் திமுகவிற்கு தெரியவில்லை.
ஸ்டாலினை முதல்வராக்கக் கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது.
காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடத்திய கூட்டத்தை திமுக புறக்கணிதத்தை திமுக நியாயப்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேலூரில் துரைமுருகன் அளித்த பேட்டியில், "காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போகட்டும். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பாக நான் துளி கூட கவலைப்பட மாட்டேன். கூட்டணியில் இருந்து விலகுவது காங்கிரஸுக்கு தான் நஷ்டம்" எனப் பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிவகங்கை மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம், துரைமுருகனின் பேச்சை சுட்டிக்காட்டி இதை ஏன் அவர் 'வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை?' என ட்வீட் செய்துள்ளார்.
குருமூர்த்தி அப்படித்தான் பேசுவார்..
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் நாட்டில் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "பணமதிப்பிழப்பு செய்ய யோசனை கூறியவர் ஆடிட்டர் குருமூர்த்தி தான். அவர் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் பேசுவார். குடியுரிமை சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரானது" என்றார்.
'ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள்'
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக முதல்வர் டெல்லி அரசுக்கு பயந்து அரசு நடத்துகிறார். ஈபிஎஸ், ஒபிஎஸ் இருவரும் ஆர்எஸ்எஸ்க்கு விசுவாசம் காட்டுவதிலேயேதான் உள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லை. தமிழகத்தில் சீமானின் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனியாக நிற்பதற்க்கு தயக்கம் காட்டுகின்றனர்" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT