Published : 16 Jan 2020 03:17 PM
Last Updated : 16 Jan 2020 03:17 PM
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த சேவல் கட்டு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 பேர் காயமடைந்ததனர். மேலும், சேவல்களின் காலில் கத்தி கட்டி விளையாடியதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் 10 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை மிக பிரபலம். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த சேவல் கட்டின்போது சேவல் காலில் கட்டப்படும் கத்தி பட்டதால் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து சேவல் கட்டு நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக சேவல் கட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பின் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று கடந்த ஆண்டு பிப்.15-ம் தேதி தொடங்கி பிப்.17-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் சேவல் கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பூலாம்வலசு சேவல் கட்டுக்கு நிகழாண்டு கடந்த 15-ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் (ஜன.18) வரை 4 நாள் சேவல் கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசில் சேவல் கட்டை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
சேவல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சேவல் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஊர்கள் பதிவு செய்யப்பட்டு சேவல்கள் அனுமதிக்கப்பட்டன. ஒவ்வொரு சேவலுக்கும் ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சேவல் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுக் கட்டணம் செலுத்தி, சேவல்களைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியிட்டன.
பந்தல்கள் அமைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட மோதல் களங்கள் அமைக்கப்பட்டு சேவல்கள் மோதவிடப்பட்டன. பந்தயம் கட்டக்கூடாது, வீடியோ எடுக்கக்கூடாது, ஜாக்கிகள் மது அருந்தியிருக்கக்கூடாது என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் கலந்து கொள்ளும் சேவல்களை கட்டாளிகள் (ஜாக்கிகள்) மோதவிட்டனர். பெண்களும் சேவல்களைக் கொண்டு வந்து மோதவிட்டனர்.
சேவல்கள் காலில் கத்தி
சேவல்களின் காலில் கத்தி கட்டக்கூடாது என விதி இருந்த நிலையில் சேவல்கள் மோதவிடும் இடத்தில் 6 சாணை பிடிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு கத்திகள் சாணை பிடிக்கப்பட்டன. சேவல்களின் கால்களில் கத்தி கட்டப்பட்டு மோதவிடப்பட்டன.
3 பேர் காயம்
இதில் திருச்சியைச் சேர்ந்த சக்திவேல் (41), திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (20), திருப்பூரைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோர் சேவல் காலில் கட்டும் கத்திப்பட்டு காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 பேர் கைது
பூலாம்வலசுவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (39), காளிமுத்து (40), கார்த்திகேயன் (33), மாரியப்பன் (45) ஆகியோர் மீது பணம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், ராஜேந்திரன் (42), ரமேஷ் (39), வடிவேல் (39), முருகேசன் (40), மூர்த்தி (30), செந்தில்குமார் (34) ஆகியோர் சேவல் காலில் கத்தி கட்டி சண்டைக்கு விட்டதுடன் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அரவக்குறிச்சி போலீஸார் 4 வழக்குகள் பதிவு செய்து, கைது செய்தனர். மொத்தம் 10 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 சேவல்கள், 4 கத்திகள், 1,150 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விதிமீறல்கள்
சேவல்களை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என விதி இருந்த நிலையில், அதிக அளவில் சேவல்கள் வந்தபோது அவை பரிசோதிக்கப்படாமல் ரூ.100 நுழைவுக் கட்டணம் வாங்கிக்கொண்டு அனுமதிக்கப்பட்டன. சேவல்கள் மீது பந்தயம் கட்டக்கூடாது என விதி இருந்தபோதும் சேவல்கள் மீது பந்தயம் கட்டப்பட்டது. இவற்றின் காரணமாக பத்திரிகையாளர்கள் புகைப்படம், வீடியோக எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.
1,000 சேவல்கள்
கோச்சை எனப்படும் போட்டியில் தோற்ற சேவல்கள் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன. பல சேவல்களை வெற்றி பெற்றவர்கள், கோச்சைகளை அங்கேயே விற்பனை செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 7,000-க்கும் அதிகமானோர் இப்போட்டியைப் பார்வையிட்டனர். கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வானங்கள் மூலம் ஏராளமானோர் வருகை தந்தனர்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து பிப்ரவரி மாதத்தில் சேவல் கட்டு நடைபெற்ற நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு பொங்கல் பண்டிகையின்போது சேவல் கட்டு நடைபெறுவதால் கட்டுசேவல் வளர்ப்பவர்கள், சேவல் சண்டை பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அதிக அளவில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வருகையால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சாலையில பூலாம்வலசு பிரிவு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவலர்கள், போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை போலீஸார், ஊர்க்காவல் படையினர் என 70 பேர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளான இன்று (ஜன.16) நடைபெற்ற இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் மோதின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT