Published : 16 Jan 2020 02:56 PM
Last Updated : 16 Jan 2020 02:56 PM
புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர், 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். அதன்பிறகு புதிய தலைவரைத் தேர்தல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி இவரது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து மக்களவைத் தேர்தல் வந்ததால், இவரது பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. தற்போது சாமிநாதன் பதவிக்காலம் முடிந்த நிலையில், இன்று (ஜன.16) புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல், கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
பாஜக தலைவர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆலோசனைப்படி மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மற்றும் தமிழ்நாடு பொதுச் செயலாளர் நரேந்திரன் ஆகியோர் இன்று தேர்தலை நடத்தினர். அதில் தற்போதைய தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
2-வது முறையாக பாஜக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சாமிநாதனுக்கு மாநில துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர் அருள்முருகன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து சாமிநாதன் எம்எல்ஏ பேசுகையில், "புதுச்சேரியில் 2021-ல் பாஜக ஆட்சி அமைக்கும் தருணமாக இதனைக் கருதுகிறோம். புதுச்சேரியில் பாஜக எங்கு இருக்கிறது என காங்கிரஸார் கூறி வருகின்றனர். பாஜக இருக்கிறது என்று 2021-ல் நிரூபிக்க வேண்டும். மீண்டும் பாஜக தலைவராக என்னைத் தேர்வு செய்ததற்கு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். புதுச்சேரியின் மீது பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை உள்ளது. காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை நாம் உருவாக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூலநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணப்பட்டு பகுதிக்குச் சென்று அங்குள்ள சுற்றுலாப் பகுதியைப் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT