Last Updated : 15 Jan, 2020 03:42 PM

1  

Published : 15 Jan 2020 03:42 PM
Last Updated : 15 Jan 2020 03:42 PM

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை: ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பாடினர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இன்று காலை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்தினர்.

திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா ஜன.11-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், பாபநாசம் அசோக் ரமணி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, காலை 5.30 மணியளவில் திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x