Published : 15 Jan 2020 08:30 AM
Last Updated : 15 Jan 2020 08:30 AM

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்பு 1,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில், தென் மாவட்டங்களிலிருந்து 700 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்கின்றனர். 1,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். அவனியாபுரத்தில் இன்றுகாலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இங்கு ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் குழு அமைப்பதில் கிராமத்தினரிடம் கருத்து வேறுபாடு இருந்தது.

இதுதொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சி.மாணிக்கம் தலைமையில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுவை உயர் நீதிமன்றக் கிளை அமைத்துள்ளது. காளைகள் பதிவு, வீரர்கள் தேர்வு, பார்வையாளர் மாடம் அமைப்பு என கடந்த 10 நாட்களாக ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி பரிசுகளைக் குவிக்கும் தென் மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அவனியாபுரம் ஈஸ்வரன் கோயில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் சாலையில் பாதுகாப்பு வேலியுடன் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 700 காளைகள், 700 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். இன்று காலை6 மணிக்கு காளைகள் மற்றும்வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு வழங்க ஏராளமான பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காளைகளால் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இருக்கவும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆயிரகணக்கான மக்கள் கூடுவர் என்பதால், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி செய்துள்ளது.

நாளை பாலமேட்டிலும், நாளைமறுநாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. 3 நாட்களிலும் மொத்தம் 5 ஆயிரம் போலீஸார், ஆயிரம் அரசு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x