Published : 15 Jan 2020 08:01 AM
Last Updated : 15 Jan 2020 08:01 AM
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்துக்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல்கலைக்கழகத்தை பிரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
மத்திய அரசின் ‘உயர் சிறப்புகல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்துக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் அடங்கிய 8 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை பள்ளி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி ஆகியவை மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகமாக செயல்படும். இதற்கு அண்ணா உயர்சிறப்பு கல்வி நிறுவனம் எனவும் புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் எனவும் பெயரிப்பட உள்ளது.
இந்த பெயர் மாற்றும் முடிவைகைவிடக் கோரி தமிழக அரசுக்குபல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல்கலைக்கழகத்தை பிரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது: தற்போதைய 4 வளாக கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தை சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. ஆனால், இதன் பெயரை மாற்ற முயற்சிப்பது தவறானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காகத்தான் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இப்போது பெயர் மாறினால் சிறப்பு அந்தஸ்து பெறுவதே சிக்கலாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹைஇன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்ஜியமாகிவிடும். தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை 5 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதியுதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டமளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாக பணிகளும் கேள்வியாகும்.
ஏழை மாணவர்கள் பாதிப்பு
இதுதவிர, தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து துணைவேந்தர் பதவி இயக்குநராக மாறக்கூடும். மேலும், இடஒதுக்கீடுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணமும் உயரும் என்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகம்தான் தமிழக மாணவர்கள் பொறியியல் கனவுக்கு உயிரூட்டுகிறது. எனவே, கல்வியாளர்கள் கருத்துகளை கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கூறும்போது, ‘‘ஒரே பெயரில் இரண்டாக பிரிப்பது சிக்கலாகும். பல்வேறு நிர்வாகக் குழப்பங்கள் ஏற்படும். தனியார் கல்லூரிகளின் நிர்பந்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எனவே, பெயர் மாற்றுவதை விட்டு புதிய பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயர் வைக்கலாம். மேலும்,பொறியியல் கல்லூரிகளை மேம்படுத்த அண்ணா பல்கலைக் கழகத்தை மண்டலவாரியாக பிரிக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டாலும் இடஒதுக்கீடு மற்றும் கட்டண விதிமுறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இந்த திட்டத்தில் தமிழக நலன் பாதிக்கப்படாதபடி முடிவுகள் எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT