Published : 14 Jan 2020 08:39 PM
Last Updated : 14 Jan 2020 08:39 PM

பொங்கல் பண்டிகையால் உச்சத்தில் மல்லிகைப்பூ விலை: ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை

மதுரை

மதுரையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தால் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலா மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்திற்கும், கட்டி விற்கப்பட்டால் ஒரு பூ ரூ.1.50 பைசாவுக்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள், மல்லிகைப்பூ வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் மதுரை மல்லிகைப்பூவுக்கு தனி மவுசும், வரவேற்பும் உண்டு. தற்போது பொங்கல் பண்டிகையால் மல்லிகைப்பூவுக்கு இன்னும் வரவேற்பு கூடியது.

மதுரை மாவட்டத்தில் தற்போது கடும் பணிப்பொழிவு காணப்படுவதால் மல்லிகைப்பூ உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிப்பூ தேவை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

ஆனால், வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மதுரை மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி மனோகரன் கூறுகையில், ‘‘மார்க்கெட்டிற்கு சீசன் காலத்தில் தினமும் 15 டன் மல்லிகைப்பூ வரும். ஆனால், தற்போது வெறும் 2 டன் முதல் 2 ½ டன் மட்டுமே வருகிறது. தற்போது பொங்கல் என்பதால் இந்த பூ போதுமானதாக இல்லை.

அதனால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த விலைக்கும் கூட மார்க்கெட்டில் பூ கிடைப்பதில்லை. கட்டி விற்கும் பூ சில்லறை விற்பனை கடையில் 100 பூக்கள் 150 ரூபாய்க்கு விற்கின்றனர்.

அப்படியென்றால் ஒரு பூவின் விலை ரூ.1.50 பைசாவுக்கு விற்கின்றனர். இந்த விலை உயர்வால் மல்லிகைப்பூ வாங்கி தலையில் சூடமுடியவில்லை. பூஜைகளிலும் பயன்படுத்த முடியவில்லை, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x