Published : 14 Jan 2020 04:29 PM
Last Updated : 14 Jan 2020 04:29 PM
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 வேளாண்மை, தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், தமிழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும் பயிர் ரகங்களை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7 வேளாண்மை பயிர்கள், 6 தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது:
"இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி 13 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நெற்பயிரில் கோ-53 மற்றும் ஏடீடி-54, கரும்பு பயிரில் சி.ஒ.சி.-13339, பருத்தியில் கோ-17, உளுந்து பயிரில் வம்பன்-11, சோளப்பயிரில் கோ-32, தினைப் பயிரில் ஏடிஎல்-1, வீரிய ஒட்டு வாழை ரகத்தில் கோ-2, வீரிய ஒட்டு தக்காளி கோ-4, சின்ன வெங்காயம் பயிரில் கோ-6, மரவள்ளி பயிரில் ஒய்டிபி-2, கொடுக்காய்புளி பயிரில் பிகேஎம்-2, மணத்தக்காளி பயிரில் கோ-1 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண்மை பயிர்கள்
கோ 53 நெல் ரகம் தமிழகத்தில் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும் 115-120 நாட்கள் கொண்ட குறுகிய கால பயிராகும். மானாவாரி நேரடி விதைப்புக்கு ஏற்றது. மகசூலாக ஹெக்டேருக்கு 3,866 கிலோ கிடைக்கும்.
ஏடீடி 54 நெல் ரகமானது ஹெக்டேருக்கு 6,307 மகசூல் தரக்கூடியது. 130-135 நாட்கள் மத்திய கால பயிரான இந்த அரிசி சன்ன ரகமாகும். 72.3 சதவீதம் அரவைத்திறன் கொண்டது. பின் சம்பா தாளடி பருவங்களுக்கு ஏற்றது.
கோ 13339 கரும்பு ரகம் 330-360 நாட்களில் முதிர்ச்சியடைந்து ஹெக்டேருக்கு 141.6 டன் கரும்பும், 18.2 டன் சர்க்கரையும் உற்பத்தியாக தரவல்லது. நடுப்பட்டம் மற்றும் பின் பட்டத்துக்கு ஏற்றது.
கோ 17 பருத்தி ரகம் 130 நாட்களில் முதிர்ச்சியடைந்து ஹெக்டேருக்கு 2,504 கிலோ பருத்தி விதைகளை மகசூலாக தரக்கூடியது. ஒரே சமயத்தில் காய் முதிர்வடைதல், செடிகள் அதிக கிளைகளின்றி இருத்தல், குறுகிய காய்ப் பிடிக்கும் கிளைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.
வம்பன் 11 உளுந்து ரகம் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. 70-75 நாட்கள் வயது கொண்டது. ஆடி, புரட்டாசி, மார்கழி, சித்திரை ஆகிய 4 பட்டங்களிலும் பயிரிட ஏற்றது. ஹெக்டேருக்கு மானாவாரியில் 865, இறவையில் 940 கிலோ மகசூல் தரவல்லது.
கோ 32 சோள ரகம் மானாவாரியில் தானியமாக 2,445 கிலோ, உலர் தட்டையாக 6,490 கிலோ மகசூல் தரும். 14.6 சதவீதம் புரதம், 5.80 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளது. மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது.
ஏடிஎல்-1 தினை ரகம் ஹெக்டேருக்கு 2,117 கிலோ தானியம், 2,785 கிலோ உலர் தட்டையும் மகசூலாக தரும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய வல்லது.
தோட்டக்கலை பயிர்கள்
கோ 2 வீரிய ஒட்டு வாழை ரகம், நெய் பூவன் ரகத்தைப் போன்றது. ஹெக்டேருக்கு 32 டன் மகசூல் தரக்கூடியது. நூற்புழு மற்றும் வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
கோ 4 வீரிய ஒட்டு தக்காளி ரகம் நீண்ட நாள் மகசூல் தரக்கூடியது. அதிக நாட்கள் சேமித்து பயன்படுத்த வல்லது. ஹெக்டேருக்கு 92.3 டன் மகசூல் கிடைக்கும்.
கோ 6 சின்ன வெங்காயம் ரகம், குமிழ்கள் மற்றும் விதை வெங்காயம் உற்பத்தி செய்ய ஏற்றது. ஹெக்டேருக்கு 300 கிலோ மகசூல் தரக்கூடியது. கோ 5 ரகத்தைக் காட்டிலும் நீண்ட நாட்கள் சேமித்து பயன்படுத்த ஏற்றது.
ஒய்.டி.பி. 2 மரவள்ளி ரகத்தில் 30 சதவீதம் மாவுச்சத்து உள்ளது. ஹெக்டேருக்கு 46.2 டன் கிழங்குகள் மகசூலாகக் கிடைக்கும்.
பி.கே.எம். 2 கொடுக்காய்புளி ரகம் சீராகக் காய்க்க வல்லது. ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 90 கிலோவும், ஹெக்டேருக்கு 13.5 டன்னும் விளைச்சல் கொடுக்கும். குறைந்த அளவு இடுபொருளில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. களர், உவர் மற்றும் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. கிலோவுக்கு ரூ.200-250 விலை கிடைக்கும்.
கோ 1 மணத்தக்காளி கீரை ரகம், ஹெக்டேருக்கு 30-35 டன் விளைச்சல் கொடுக்கும். வைட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ் சத்து மிக்கது. தோட்டங்கள், வீடு மற்றும் மாடித் தோட்டங்களில் சாகுபடி செய்ய ஏற்றது"
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT