Published : 14 Jan 2020 04:31 PM
Last Updated : 14 Jan 2020 04:31 PM
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு விளைடாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து வெளிக்கொணரும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மாபட்டியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். அமைச்சர் ஆர் பி உதயகுமார் போட்டியைத் தொடங்கிவைத்தார்.
கைப்பந்து, பேட்மிட்டன், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கிரிக்கெட் போட்டியை தொடங்கும்போது அமைச்சர் உதயகுமார் பந்து வீச, ஆட்சியர் வினய் பேட்டிங் செய்தார். பின்னர் ஆட்சியர் பந்து வீச, அமைச்சர் பேட்டிங் செய்தார். கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
விழாவில் பேசிய அமைச்சர், "ஊராட்சிகள் தோறும் விளையாட்டுப் போட்டி திட்டத்தை முன்னாள் முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். இதனை மேலும் விரிவு படுத்தும் வகையில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ரூ.76.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராமங்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி மையம், உபகரணங்கள் என பல வசதிகள் செய்ய்யப்படுகிறது.
மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும். இங்கு கிடைக்கும் பயிற்சி மூலம் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும்"
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ,துணை ஆட்சியர் பிரியங்கா, கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT