Published : 14 Jan 2020 03:09 PM
Last Updated : 14 Jan 2020 03:09 PM
முதல்வர், அமைச்சர்கள் மீது காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு ஊழல் குற்றச்சாட்டு கூறி அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதற்கு, காங்கிரஸ் சாத்வீகமான கட்சி; மேலிடம் பொறுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு முதல்வர் நாராயணசாமியையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியையும் சந்தித்தார். முதல்வர் மற்றும் அவருடைய மகன் மீது நில மோசடி தொடர்பாக எம்எல்ஏ தனவேலு குற்றம்சாட்டியதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் கூட்டாக இன்று (ஜன.14) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அனந்தராமன் கூறியதாவது:
"முதல்வர் கொல்லைப்புறமாக வந்தார் என்று விமர்சித்த தனவேலுதான் அவர் முதல்வராகும் ஆதரவு கடிதத்தில் மூன்றாவதாக கையெழுத்திட்டவர். கடந்த 2 ஆண்டுகளாக தனவேலு காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பில் இல்லை. ஆட்சியை கலைக்கவும், எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையில் ஆட்சியை கொண்டு வரவும் தனவேலு செயல்பட்டார். தனவேலு பாஜக ஏஜென்ட்.
அத்துடன் அதிமுக எம்எல்ஏவுடன் இணைந்து மாஹே எம்எல்ஏவை ஆட்சி மாற்றம் செய்ய தனவேலு பேரம் பேசினார். மக்களவைத் தேர்தலிலும் கட்சி பணி செய்யவில்லை. முதல்வர், அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். முடிந்தால் அவர் ஊழலை நிருபிக்க தயாரா என்ற கேள்வி எழுப்புகிறோம். அவர் தலைவராக உள்ள பாப்ஸ்கோவில் சிபிஐ விசாரணை வைத்தால் ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.
அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டும் தனவேலுவின் தொகுதிக்கு மொத்தமாக ரூ.100 கோடிக்கு பணிகள் நடக்கிறது. பாகூரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருந்துகள் உள்ளன. எம்எல்ஏ தனவேலு தனது போக்கை மாற்றுவதுடன், உணர்ச்சி அடிப்படையில் பேசக்கூடாது" என தெரிவித்தார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் முன்பே ஈடுபட்டபோது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு, "காங்கிரஸ் சாத்வீகமான கட்சி. மேலிடம் பொறுமையாக நடவடிக்கை எடுக்கும். முன்பு ஊகமாக தெரிந்த விஷயம் தற்போது வெளிப்படையாகியுள்ளது" என்று எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
இறுதியில் நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி கூட்டத்தை முடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT