Published : 14 Jan 2020 07:34 AM
Last Updated : 14 Jan 2020 07:34 AM

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?- சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தை திமுக புறக்கணிப்பு

சென்னை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித் துள்ளது. ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சினையால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. ஆனால், இதில் மம்தா பானர்ஜி, மாயாவதி மற்றும் திமுக சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் திமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது’ எனக் கூறியிருந்தார்.

மறைமுகத் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளில் வெளியான இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், சில இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்தால் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் அதிக இடங்களை திமுக கூட்டணி பெற்றிருந்தும் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். திமுகவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

21-ம் தேதி விவாதிப்போம்

இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வெளியிட்ட அறிக்கை கூட்டணியில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திடீரென அறிக்கை வெளியிட்டது ஏன் என தெரிய வில்லை. இது, ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே பெற்றி பெற்றுள்ளது.

ஆனால், மறைமுக தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், நிறைய இடங்களில் ஒன்றிய தலைவர்கள் தேர்விலும் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது திமுகவினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக வரும் 21-ம் தேதி நடக்கவுள்ள திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x