Published : 13 Jan 2020 09:25 PM
Last Updated : 13 Jan 2020 09:25 PM
ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களைக் கடுமையாகவும் விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு மீது மேலிடத்தில் புகார் தர முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
அதே நேரத்தில் இன்று மாலை ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எம்எல்ஏ தனவேலு சந்தித்தார். பொங்கலுக்குப் பிறகு டெல்லி சென்று புகார் தர உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு, அரசு மீது குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் சுமத்தியுள்ளார். கடும் விவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லை எனப் போராட்டம் நடத்தினார். முதல்வரைக் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தனவேலு, முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத்தையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கட்சித் தரப்புக்கு வலியுறுத்தினர். ஆனால், எம்எல்ஏவாக இருப்பதால் கட்சி ரீதியான நடவடிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் எடுக்க இயலாது. கட்சி மேலிடமே நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனையும் செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலை முதல்வர் நாராயணசாமியும், பிற்பகலில் அமைச்சரும் மாநிலத் தலைவருமான நமச்சிவாயமும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆட்சியையும், முதல்வர், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு மீது கட்சி மேலிடத்தில் புகார் தர அறிக்கையுடன் சென்றுள்ளனர். புதுச்சேரி பொறுப்பாளர் சஞ்சய்தத், மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் சோனியாவின் உதவியாளர் கே.வி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து புகார் தர உள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
இச்சூழலில் இன்று மாலை ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் தொகுதி நலத்திட்டங்களைத் தடுக்கும் முயற்சி நடப்பதால் அதைத் தொடர ஆளுநரிடம் கூறினேன். புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் தொடர்பான ஊழல் கோப்புகளைச் சேகரித்து வருகிறேன். ஆளுநரிடம் ஊழல் தொடர்பாக புகார் ஏதும் தரவில்லை.
என்னை காங்கிரஸ் கட்சியால் அழிக்க முடியாது. என்னை அழிக்க நினைப்போரின் அரசியல் வாழ்வுதான் முற்றுபெறும். சிபிஐயில் புகார் தரவில்லை. ஏனெனில் சிபிஐ அமைச்சராக நாராயணசாமி இருந்ததால் அவருக்கு அங்கிருப்போரைத் தெரியும்.
கட்சித் தலைமையிடம் புகார் தர முயற்சி எடுத்துள்ளேன். பொங்கலுக்குப் பிறகு டெல்லி சென்று அனுமதி கிடைத்தவுடன் புகார் தருவேன். பாப்ஸ்கோ தலைவராக இருந்தாலும் அது மூடும் நிலையில் உள்ளது. நான் வெறும் பெயரளவில்தான் தலைவராக உள்ளேன். புதுச்சேரியில் காங்கிரஸாரை வாரியத் தலைவராக்கும் கோப்புக்கு அனுமதி தரவும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT