Published : 13 Jan 2020 09:10 PM
Last Updated : 13 Jan 2020 09:10 PM
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினர்கள் ஆனார்கள். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், மூத்த வழக்கறிஞர்கள் சிராஜுதீன், அஜ்மல்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நியமன உறுப்பினர்களை விட தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால், தேர்வு செய்த உறுப்பினர்களை விட, நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வக்பு வாரிய நிர்வாகத்தை ஏன் அரசே ஏற்று நடத்தக்கூடாது என விளக்கம் கேட்டு 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சிறுபான்மையினர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர் தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகத்தை அரசு ஏற்றது. இதற்கான ஆணையை சிறுபான்மை நலத்துறை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த ஃபஸ்லூர் ரகுமான் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “வக்பு வாரியத்தை அரசு ஏன் ஏற்று நடத்தக்கூடாது என அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு வாரியம் பதிலளிப்பதற்கு முன்பாக, நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும்.
வக்பு நிர்வாகத்தில் அரசு தலையிடத் தடைவிதிக்க வேண்டும். வக்பு வாரியத்தை அரசு ஏற்று நடத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் தமிழக அரசும், தமிழ்நாடு வக்பு வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 28-ம் தேதி நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT