Published : 13 Jan 2020 12:15 PM
Last Updated : 13 Jan 2020 12:15 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் தை முதல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.
கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும்.
எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்த உத்தரவிட்டது.
அதே போல் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ், விழாக்கமிட்டியினர் நடத்த உத்தரவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT