Published : 13 Jan 2020 11:29 AM
Last Updated : 13 Jan 2020 11:29 AM
அதிமுகவின் கோஷ்டி பூசலால் கலசப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றி, தனது மகனின் முதல் செயல்திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் திமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி, கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவின் செல்வாக்கு பெற்ற தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை உறுப் பினர்களாக உள்ளனர்.
அதிமுக ஆதிக்கத்தில் இருந்து கலசப்பாக்கம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மிகவும் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறார். இதையொட்டி, கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று தனது மகன் எ.வ.கம்பனுக்கு, தொகுதி பொறுப்பாளர் பதவியை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு, தேவையான நேரங் களில் அரசியல் நகர்வுகளை நுணுக்கமாக எடுத்துரைத்து வருகிறார்.
கோட்டை விட்ட அதிமுக
இந்நிலையில் ஊரக உள் ளாட்சித் தேர்தலில், கலசப்பாக்கம் ஒன்றியக் குழுவை கைப்பற்ற வேண்டும் என ‘அசைன்மென்ட்’ எ.வ.கம்பனுக்கு வழங்கப்பட்டது. அவரும், அதற்கேற்ற வகையில் செயல்பட்டார். இருப்பினும், 21 உறுப்பினர்களில், 9 இடங்களை மட்டுமே திமுகவால் கைப்பற்ற முடிந்தது. 8 இடங்களை அதிமுகவும், தலா 2 இடங்களை பாமக மற்றும் சுயேட்சைகள் கைப்பற்றினர்.
கூட்டணி பலம் இருப்பதால், கலசப்பாக்கம் ஒன்றியக் குழுவை அதிமுக எளிதாக கைப்பற்றி விடும் என்ற நிலை உருவானது. இதனை முறியடித்து, மகனின் முதல் செயல்திட்டத்தை வெற்றியடைய செய்து தலைமையிடம் நன் மதிப்பை பெற வேண்டும் என தனி கவனம் செலுத்தினார் எ.வ.வேலு.
அவரது எண்ணத்துக்கு, கலசப்பாக்கத்தில் நிலவி வரும் அதிமுகவின் கோஷ்டி பூசலும் வலு சேர்த்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் ஆதரவாளரான ஒன்றியச் செயலாளர் திருநாவுக் கரசு மனைவி செந்தில்குமாரிக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துணையாக இருந்துள்ளார்.
பணபலம் இல்லாததால்...
இதனால், அந்த பதவிக்கு தீவிரம் காட்டிய அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் ஆதரவாளரான துரை ஏமாற்றம் அடைந்தார். பண பலம் இல்லாததால், போதிய பலத்தை பெற முடியாத நிலை திருநாவுக்கரசுக்கு ஏற்பட்டது. மும்மூர்த்திகளாக அதிமுக தொண் டர்களால் போற்றப்படும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேடிக்கை பார்த்தனர்.
இதையறிந்து கொண்ட எ.வ.வேலு, தனது அரசியல் சதுரங்க விளையாட்டை தெளி வாக அரங்கேற்றி, மகனின் முதல் செயல்திட்டத்தை வெற்றி யடைய செய்துவிட்டார். திமுக சார்பில் போட்டியிட்ட அன்பரசி, 12 வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திமுகவினர் நம்பிக்கை
அதிமுக சார்பில் செந்தில் குமாரிக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த வெற்றியின் மூலம், கட்சித் தலைமையிடம், மகன் எ.வ.கம்பனுக்காக அடுத்தக்கட்ட நகர்வுக்கான பாதையை பலமாக அமைத்துக் கொண்டுள்ளார் எ.வ.வேலு. அதிமுகவில் நிலவிய கோஷ்டி பூசல் தொடர்ந்தால், வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில், எ.வ.வேலு போட்டுள்ள கணக்கு எளிதாக நிறைவேறும் என திமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இரா.தினேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT