Published : 13 Jan 2020 10:50 AM
Last Updated : 13 Jan 2020 10:50 AM

இயற்கை வேளாண் மாவட்டமாக மாறுமா நீலகிரி?

உதகை

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தற்போது ரசாயனங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என குரல் ஒலித்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப் பயிர்களும், கேரட், பீட்ரூட், டர்னிப், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஏராளமான மலைக் காய்கறி களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆங்கிலேயர்களிடமிருந்து விவசாய முறையைக் கற்றுக் கொண்டு, நீலகிரியில் வாழக்கூடிய மக்கள் இன்றளவும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக தேயிலையும், மலைக் காய்கறிகளும் உள்ளன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விவசாயமும் 7000 ஹெக்டேர் பரப்பளவில் மலைக் காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்ற காய்கறிகளைவிட நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் மலைக் காய்கறிகளுக்கு அதிக அளவிலானரசாயன மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ரசாயன உரங்களைக் கொட்டி அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் மகசூல் மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ரசாயன உரம் மற்றும் மருந்துகளால் மனிதர்களுக்கு பல தீராத நோய்கள் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலிலும் பெரிய அளவு கேட்டினை ஏற்படுத்தி வருகிறது எனச் சூழலியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக வேளாண் வேதியியல் பொருட்கள் எனப்படும் ரசாயன மருந்துகளில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோணக் குறியீடுகளைக் கொண்ட மருந்து வகைகளுக்குத் தடை விதிக்கும் முயற்சியில் நீலகிரிமாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

இதற்கு சில விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. உதகையில் நடந்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட உருளைக் கிழங்கு மற்றும் காய்கறிவிவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.ரங்கசாமி ‘நீலகிரி மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத் துறையும் இணைந்து மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, இதுநாள் வரை விவசாயிகள் பயன்படுத்தி வந்த அத்தியாவசியமான பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சாணக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகளை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தடை அமலுக்கு வந்தால் பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது. இதனால், விவசாயத்தை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.ஆனால், நீலகிரி மாவட்டம் முழுமையாக இயற்கை வேளாண் மாவட்டமாக மாற வேண்டும் என்கின்றனர் ஒரு தரப்பு விவசாயிகள்.

நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் ஹெச்.என்.சிவன்கூறும்போது, ‘நீலகிரியில் விவசாயப் பணிகளுக்கு தொடர்ந்து ரசாயனங்களைப் பயன்படுத்தி வந்ததன் விளைவாக மண்ணும், நீரும் கடுமையாக மாசடைந்து வருகிறது.

இந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, சருமப் பிரச்சினை போன்ற நோய்கள்ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.பூச்சிக் கொல்லிகளை நான்காக வகைப்படுத்தி சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை வண்ணங்களில் முக்கோணக் குறியீடுகள் இடப்பட்டிருக்கும். இதன் குறியீட்டு நிறத்துக்கு ஏற்ப அவற்றின் வீரியம் அளவிடப்படும்.

இவற்றில் சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோணம் இடப்பட்டுள்ள வகை மருந்துகள் வீரியமிக்கவை. இந்த வகையில் 50-க்கும் அதிகமான மருந்து வகைகள் உள்ளன. தொடர்ந்து இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் மண் மற்றும் நீர் அதன் தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்களுக்குத் தடை விதிப்பது உடனடித் தேவையாக உள்ளது. கடந்தாண்டு பெய்த கன மழை காரணமாக நிலத்தில் உள்ள ரசாயனங்கள் அடித்து செல்லப்பட்டு, தற்போது விளை நிலங்கள் செழிப்பாக உள்ளன. இந்த தருணத்தில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது எளிதானது. மீண்டும் ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்டால், விளை நிலங்கள் மீண்டும் மலடாகும்’ என்றார்.

இதுகுறித்துத் தோட்டக் கலைத்துறைஇணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜிடம் கேட்டபோது ‘நீலகிரியை முழு இயற்கை விவசாய மாவட்டமாக்க கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோண வேளாண் வேதியியல் பொருட்களைத் தடை செய்ய விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகள் அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசின் பரிசீலனைக்குப் பின்னரே, நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்க முடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x