Last Updated : 13 Jan, 2020 07:48 AM

 

Published : 13 Jan 2020 07:48 AM
Last Updated : 13 Jan 2020 07:48 AM

பாம்பு கடி, பூச்சிகள் கடி, ரசாயனங்களால் ஏற்படும் விஷ பாதிப்பை அறிய 24 மணிநேர இலவச தகவல் மையம்: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் உயிர் காக்கும் சேவை

கோவை

இந்தியாவில் பாம்புக் கடியால் ஆண்டுதோறும் 28 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், அதில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, பல்வேறு வகையான விஷ பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, அவசர கால தகவல்களை அளித்து பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் செயல்படும் நச்சுக்கள் தகவல் மையம் (Poisons Information Centre). இங்கு பாம்பு, பூச்சிகள், தேள், குளவி, சிலந்தி கடி, பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு என அனைத்து வகை நச்சுக்கள் குறித்தும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் இலவசமாக தகவல் அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் பொதுமருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆனந்த் சகரியா, நச்சு
வியல் பிரிவு இணைப்பேராசிரியர் டாக்டர் ரவிகர் ரால்ப் ஆகியோர் கூறியதாவது: பெரும்பாலான நச்சு வாயுக்கள், விஷங்கள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். அதைப்பார்த்து நச்சுவியல் துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தகவல் மையம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

தகவல் மையத்தை 18004251213 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள், மருத்துவத் துறையினர் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் அழைத்து தகவல் பெறலாம். சராசரியாக ஒருநாளைக்கு 35 முதல் 40 அழைப்புகள் வருகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள், மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுவிட்டால் ஏற்படும் பாதிப்பு, பாம்புக்கடி ஆகியவை குறித்து தகவல் தெரிந்துகொள்ள அதிக அழைப்புகள் வருகின்றன.

விஷத்தின் தன்மை, அதன் விளைவுகள், எவ்வளவு நேரத்துக்கு பாதிக்கப்பட்டவருக்கு தாக்கம் இருக்கும், என்ன மருந்தை அளிக்கலாம் என்பது போன்ற தகவல்களை பல மருத்துவமனைகளில் இருந்து கேட்டுப் பெறுகின்றனர். விஷத்தின் தன்மை, அதற்கேற்ற மருந்து குறித்த தகவல் பெறுவதற்கு பாதிக்கப்பட்டவரின் வயது, எடை ஆகியவற்றை கூற வேண்டும். விஷத்தை அருந்தியிருந்தால் அந்த பாட்டிலின் மேல் உள்ள லேபிளின் புகைப்படத்தையோ, அதில் உள்ளவிவரத்தையோ தெரிவித்தால் உடனே தகவல் தெரிவிக்கப்படும்.

பாம்பு கடிக்கு செய்ய வேண்டியவை

பாம்பு கடித்துவிட்டால் எதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து பலருக்கு தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால் பாதிக்கப்பட்ட நபர் பதற்றம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விஷம் பரவுவதைத் தடுக்க கடிபட்ட கை, காலை அசைக்காமல் தூக்கிச் செல்ல வேண்டும். நடப்பது, ஓடுவது போன்ற செயல்கள், விஷம் வேகமாக பரவ வழிவகை செய்து
விடும்.

பாம்பு கடித்த இடங்களில் வளையல், மோதிரம், கொலுசு போன்ற அணிகலன்களை கழற்றி விடுவது நல்லது. கடிபட்ட இடத்தை கத்தி, பிளேடு போன்றவற்றைக் கொண்டு கீறக்கூடாது. கடித்த இடத்துக்கு மேல் விஷம் பரவுவதைத் தவிர்க்க கட்டு போடக்கூடாது. காலம் தாழ்த்தாமல் அருகில் உள்ள பாம்பு விஷ முறிவு மருந்து கிடைக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதன்மூலம், பாம்புக் கடியால் நிகழும் மரணத்தை முழுமையாக தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x