Published : 07 May 2014 12:00 AM
Last Updated : 07 May 2014 12:00 AM

சென்னையில் அடுத்தடுத்து குண்டு மிரட்டல்: சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையத்தில் தீவிர சோதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட பீதி மறைவதற்குள், அடுத்தடுத்து வெடிகுண்டு புரளிகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரயில்வே உதவி மைய கட்டுப்பாட்டு அறைக்கு (9962500500) செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் இரண்டு பேர் நடமாடுகிறார்கள்' என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக ரயில்வே போலீஸார், சிபிசிஐடி போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சந்தேகப்படும் விதத்தில் எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் நிம்மதிப் பெருமூச்சு வி்ட்டனர்.

விமான நிலையம்

இதே நேரத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மீது கார் வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறைக்கு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து உளவுத்துறை எச்சரித்ததால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை விமான நிலையம் தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’டில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்ததுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக இங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளேயும், வெளிப்பகுதியிலும் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் நான்கு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் ஏறி நின்று 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தமிழக சிபிசிஐடி, நுண்ணறிவுப் பிரிவு, மத்திய உளவுப்பிரிவான ஐ.பி, 'ரா' பிரிவினரும் விமான நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையங்களுக்கு தனித்தனியாக செல்லக்கூடிய வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி ஒரே பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவமனைக்கு குண்டு மிரட்டல்

கோடம்பாக்கம் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் செவ்வாய்க்கிழமை காலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் குண்டுகள் ஏதும் சிக்கவில்லை.

சென்ட்ரலில் கடந்த 1-ம் தேதி ரயிலில் குண்டு வெடித்த பின்னர் ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் ஒரு கல்லூரி என ஒரே நாளில் மூன்று இடங்களுக்கு குண்டு மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து இப்போதும் சென்ட்ரல், விமான நிலையம், மருத்துவமனை என ஒரே நேரத்தில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதுபோல புரளி கிளப்பி பொதுமக்களின் அமை திக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x