Published : 11 Jan 2020 08:24 AM
Last Updated : 11 Jan 2020 08:24 AM
தமிழக க்யூ பிரிவு போலீஸாரால் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய தமிழக க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அடிப்படைவாத (தீவிரவாதம்) இயக்கத்தை ஆரம்பித்து தமிழகத்தில் நாச வேலைகளில் ஈடுபட சிலர் திட்டமிட்டிருப்பதாக தமிழக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸார்பெங்களூரு
வில் பதுங்கி இருந்த பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையத் ஆகிய 3 பேரை கடந்த 7-ம் தேதி துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இந்த 3 பேரும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு, போலியாக சிம் கார்டு மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் பெற உதவியதாகவும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது 2014-ல் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய தீவிரவாத ஒருங்கிணைப்பாளரின் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் வாகன சோதனையின்போது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இதற்கும், பெங்களூருவில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கும் தொடர்பு உள்ளதா, இவர்கள் வேறு ஏதேனும் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டார்களா என துப்பு துலக்க க்யூ பிரிவு போலீஸார் முடிவு செய்தனர்.
இதையடுத்து இவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஸ்லின்மேரி முன்பாக போலீஸார் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பின்னர், நேற்று மாலை முதல் 3 பேரையும் தனி இடத்தில் வைத்து தனித்தனியாக போலீஸார் விசாரித்துள்ளனர். உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் வேறு எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுடன் எப்படி எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, கேரளா, டெல்லி உள்
ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT