Last Updated : 10 Jan, 2020 08:04 PM

 

Published : 10 Jan 2020 08:04 PM
Last Updated : 10 Jan 2020 08:04 PM

கமுதி கவுன்சிலர்களை கடத்தியதில் திமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 கார்கள் சேதம்; இருவர் காயம்- அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது 

தேவகோட்டை 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியக் கவுன்சிலர்களைக் கடத்தியது தொடர்பாக திமுக, அதிமுகவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதில் அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. அரிவாளால் வெட்டியதில் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக 48 பேர் மீது வழக்கு பதிந்து அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

கமுதி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 7, பாஜக-1, தேமுதி-1 என அதிமுக கூட்டணி 9 இடங்களில் வென்றன. மேலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களில் வென்றன. இந்நிலையில் மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் தேவை என்பதால் குதிரை பேரம் நடந்தது.

இந்நிலையில் திமுக கவுன்சிலர் தமிழ்செல்வி கணவர் போஸ் தலைமையில் திமுக தரப்பினர் ஒரு தேமுதிக கவுன்சிலர், 2 சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட, 10 கவுன்சிலர்களை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து தேமுதிக கவுன்சிலரை மீட்பதற்காக கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் 6 கார்களில் வந்தனர்.

இதனால் இருத்தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன.

மேலும் திமுக தரப்பைச் சேர்ந்த போஸ், புதுக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த விஜய் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து உதவி எஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் காளிமுத்து, அவரது மனைவி முத்துபனியம்மாள் உட்பட 48 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். மேலும் காளிமுத்து உட்பட 5 பேரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x