Published : 10 Jan 2020 04:12 PM
Last Updated : 10 Jan 2020 04:12 PM
ஹஜ் பயணம் செல்லும் பயணிகளைக் குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யும் பணி வரும் ஜனவரி 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு:
“ஹஜ் 2020-க்காக 6,028 (7 குழந்தைகள் உட்பட) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஹஜ் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. எனவே, ஹஜ் 2020-க்கான ஹஜ் பயணிகளை 13.01.2020 அன்று குலுக்கல் முறை (குறா) மூலம் தேர்வு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை, இந்திய ஹஜ் கமிட்டி கேட்டுக் கொண்டபடி, ஹஜ் பயணம் செல்ல 2020-க்கான ஹஜ் பயணிகளை குலுக்கல் (குறா) முறை மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இக்குலுக்கல் நிகழ்ச்சி ஜன.13 (திங்கட்கிழமை) அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக் கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
2018-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் புனிதப் பயணிகளுக்கு ஹஜ் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஹஜ் 2020-க்காக ஹஜ் மானியத் தொகை வழங்கும் பொருட்டு, குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறையிலுள்ள அனைத்துப் பயணிகளும் தங்களின் தனிப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலினை ( IFSC குறியீடு அடங்கிய ) தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஹஜ் 2020-க்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT