Published : 10 Jan 2020 07:09 AM
Last Updated : 10 Jan 2020 07:09 AM

சென்னை புத்தக காட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.75 லட்சம்: தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற 43-வது புத்தகக் காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து, சிறந்த பதிப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்கள், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். உடன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், வி.சரோஜா, க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், நல்லி குப்புசாமி, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே.முருகன் மற்றும் நிர்வாகிகள்.

சென்னை

2021-ம் ஆண்டு முதல் சென்னை புத்தகக் காட்சிக்கு அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், 43-வது புத்தகக் காட்சி தொடக்க விழா பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில்,முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு புத்தகக் காட்சியைத்தொடங்கிவைத்து சிறந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி சுற்றுலா பொருட்காட்சியும், புத்தகக் காட்சியும் சென்னையில் ஒருசேர நடைபெறுவதுசிறப்பு அம்சமாகும். புத்தக ஆர்வலர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகமாக புத்தகம்எழுதுவதற்கும், புத்தக வாசிப்பைபரவலாக்குவதற்கும், புத்தகம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 24-8-1976-ல் ஒரு கூட்டமைப்புஉருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பு முதன் முதலில் 1977-ம்ஆண்டு சென்னையில் புத்தகத்திருவிழாவை நடத்தியது.

இன்று தொடங்கப்படும் 43-வதுபுத்தகக் காட்சி அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழாவாகும். இன்றுமுதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகக் காட்சியில், கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு அரங்கம் 3 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் என்னென்ன பயன்படுத்தினார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்றும், நம் தமிழகத்தி்ன் பெருமை பற்றியும், இன்றளவும் பாராட்டப்படும் அக்கால நாகரிகம் குறித்தும் காணலாம்.

திருவள்ளுவர் மணற் சிற்பம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் உள்ளிட்டபல பிரிவுகளில் புத்தகங்கள் இப்புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ளது.

நூலக இயக்ககத்தின் மேம்பட்ட செயல்பாட்டுக்காக இந்த ஆண்டு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியுதவியுடன் ரூ.5 கோடியே 79 லட்சத்தில் 1 லட்சம் நூல்கள் அடங்கிய ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

புத்தகங்களை வாங்கிப் படித்து திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டு்ம் என்று பொதுமக்களை குறிப்பாக இளைய சமுதாயத்தினரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த ஆண்டில் இருந்து இப்புத்தகக் காட்சிக்கு அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். நிறைவில், பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் நன்றி கூறினார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், டாக்டர் சரோஜா, முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x