Published : 09 Jan 2020 10:56 AM
Last Updated : 09 Jan 2020 10:56 AM
பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலருக்கு எதிரான 18 கிரானைட் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு காவல் நிலையங்களில் 2012 முதல் 2015 வரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 79 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 46 வழக்குகள் மேலூர்நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மேலூர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
18 வழக்குகள்
இதையடுத்து பிஆர்பி நிறுவனத்துக்கு எதிரான 15 வழக்குகள், ஓம்ஸ்ரீ நிறுவனத்துக்கு எதிரான 2 வழக்குகள், கோரமண்டலம் நிறுவனத்துக்கு எதிரான ஒரு வழக்கு என 18 வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் நேற்று வழங்கப்பட்டன.
இதற்காக நீதித்துறை நடுவர்கார்த்திகேயன் முன்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, சார்பு ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர்பழனிச்சாமி உட்பட 18 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொண்டனர். பின்னர், விசாரணையை ஜன. 29-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT