Published : 09 Jan 2020 10:27 AM
Last Updated : 09 Jan 2020 10:27 AM
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடைபெற்ற விவாதம்:
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): மதுபானக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றீர்கள். இப்போது எத்தனை கடைகளை மூடியுள்ளீர்கள்?
அமைச்சர் பி.தங்கமணி: 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 6 ஆயிரத்து 764 கடைகள் இருந்தன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் 500 கடைகளை குறைத்தார். அதன்பின் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றதும் 500 கடைகளை குறைத்தார். அதன்படி 5 ஆயிரத்து 764 கடைகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 5 ஆயிரத்து 500 கடைகள்தான் உள்ளன. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் மது விற்பனை நடைபெறுவதாலும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தற்போது ரூ.5 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கே.ஆர்.ராமசாமி: மதுபான விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதே?
முதல்வர் பழனிசாமி: புதுச்சேரியில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை தேசிய அளவில் ஒன்றுதானா. அல்லது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: புதுச்சேரியில் நிதி நிலையை காரணம் காட்டி மதுபானம் விற்பனையுடன் சேர்த்து தற்போது சீட்டாட்ட கிளப்களுக்கும் அனுமதி அளிக்க உள்ளனர். இதனால், அங்குள்ள இளைஞர்கள் மட்டுமின்றி, தமிழக இளைஞர்களும் பாதிக்கப்படுவார்கள்.
கே.ஆர்.ராமசாமி: மதுக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தீர்கள். அடுத்த ஓராண்டில் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
அமைச்சர் பி.தங்கமணி: மதுபான விலை 15 சதவீதம் உயர்ந்ததால், மது விற்பனை அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 500 மதுக்கடைகளில் முதல்கட்டமாக 2 ஆயிரம் மதுக்கடை பார்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT