Published : 08 Jan 2020 06:28 PM
Last Updated : 08 Jan 2020 06:28 PM

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் கொண்டாடுபவர் ஸ்டாலினா? எடப்பாடி பழனிசாமியா?- வெற்றிடம் நிரம்பியுள்ளதா?- அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சிறப்புப் பேட்டி

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக அவரவர் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இதில் இரண்டு தரப்பும் சரிபாதி மாவட்டக் கவுன்சில்களைப் பிடித்த நிலையில் ஊராட்சி மன்றம் கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியங்களில் திமுக கணிசமாக வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு தரப்பும் வெற்றியைக்கொண்டாடும் நிலையில், யாருக்கு உண்மையான வெற்றி கிடைத்துள்ளது? அதிமுக மீண்டெழுந்துள்ளதா? திமுக தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளதா? கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த நிலையில் தேர்தலில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்களுக்கான பலத்தை நிரூபித்துள்ளனரா? வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்குத்தான் வெற்றி கிடைத்தது? அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே கொண்டாடுகிறதே?

நாடாளுமன்றத் தேர்தல் அடிப்படையில் பார்த்தால் அதிமுகவுக்கு வெற்றி. இடைத்தேர்தல் தோல்வி அடிப்படையில் பார்த்தால் திமுகவுக்கு வெற்றி. நான் இடைத்தேர்தல் வெற்றி குறித்து எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்கு மரியாதை தருவது இல்லை.

மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீதம் மட்டுமே எடுத்த அதிமுக, தற்போது 35 சதவீதம் வாக்குக்கு வந்துவிட்டது. கொங்கு பெல்ட் உள்ளிட்ட இடங்களில் அதிக இடங்களைப் பெற்று அதிமுக எமர்ஜாகியுள்ளது.

ஆனால், ஜெயலலிதா காலத்தில் 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியை இப்போது அதிமுக பெறவில்லையே?

ஈபிஎஸ் ஜெயலலிதா அல்ல. 2011-ல் பெரிய அளவில் வெற்றி பெற்ற அதிமுக 2019-ல் 18.5 சதவீதத்துக்குப் போய்விட்டது. அதிமுக விழுந்துவிட்டது என்றுதான் சொல்கிறோம். அதிமுக வரலாற்றில் மிகக்குறைவான வாக்குகள் பெற்றது 2019 நாடாளுமன்றத் தேர்தலில்தான். அதனால்தான் அதிமுக பெரிய அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அப்படியானால் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அதிமுகவிற்கான வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை. அதிமுக மீண்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்க முடியாது. திமுக, ராகுல் காந்தியை மையப்படுத்தி பெற்ற மிகப்பெரிய வெற்றியிலிருந்து கீழே போயுள்ளது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலிலிருந்து உள்ளாட்சித் தேர்தலை நோக்கிய வெற்றி எனப் பார்த்தால் ஒரு எதிர்க்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். அந்த வகையில் ஸ்டாலின் சாதித்துவிட்டார்.

இப்படியும் இல்லாமல் அப்படியுமில்லாமல் என்றுதான் வெற்றியைப் பார்க்கவேண்டுமா?

நீங்கள் எதிலிருந்து அதை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பார்வை இருக்கும். அப்படியென்றால் நீங்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஜெயலலிதாவுக்குரிய அந்தஸ்தைக் கொடுக்கிறீர்களா? கொடுக்க முடியாது அல்லவா?

இதிலிருந்து இன்னொரு கேள்வி வருகிறது. இரண்டு தலைவர்கள் இல்லா வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதா?
இல்லையில்லை. வெற்றிடம் நிரப்பப்படவில்லை. 2021-ல் வெற்றியாளர் வரும்போது அனைவருக்கும் வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதா என்பது தெரியவரும். அது ரஜினியாகக்கூட இருக்கலாம்.

உள்ளாட்சியில் திமுக வலுவாக ஒன்றியங்களில் காலூன்றி உள்ளது. இது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

அன்று வரக்கூடிய பிரச்சினை, தலைவர்கள், அன்று ரோல் பண்ணக்கூடியவர்களால் முடிவுகள் வரலாம்.

ரஜினியே இல்லாமல் அதிமுக, திமுக சந்திக்கும் அரசியல் எதை நோக்கிப் போகும்? இதே கூட்டணி தொடர்ந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கலாம்?

இப்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்னும் ஓராண்டு உள்ளது. சூழ்நிலை எவ்வளவோ மாறும். சொல்ல முடியாது. திமுக இமாலய வெற்றியைக் கூடப் பெறலாம். அல்லது குறையவும் வாய்ப்பு உள்ளது. இன்றுள்ள நிலையைப் பற்றிப் பேசும்போது திமுக வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. பிரச்சினைகள் உள்ளன அல்லவா? அது தேர்தலைத் தீர்மானிக்கும்.

பிரச்சினைகள் திடீரென வந்து தேர்தல் வெற்றியை மாற்றிவிடுமா?

மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மாறவே மாறாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாஜக இந்த உள்ளாட்சித் தேர்தலில் சாதித்துள்ளதா?

பாஜக கட்சி உள்ளது. தலைவர் இல்லை. நடைமுறைத் தந்திரம் இல்லை. எடப்பாடி பழனிசாமி இல்லாமல் பாஜக இல்லை.

தற்போது தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்றதாகச் சொல்கிறார்களே?

அது 2 சதவீதம் கூட இல்லை. அதைக் கொண்டாட முடியாது. பாமக 3 சதவீதம்கூட இல்லை. தேமுதிக 1.5 சதவீதம்கூட இல்லை. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஒன்றுமில்லை.

டிடிவி தினகரன் தனியாக நின்று 90-க்கும் மேல் ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ளாரே?

பரவாயில்லை. அவர் 6 சதவீதம் தாண்டிவிட்டார் என்றால் அது நல்ல வெற்றிதான்.

கமல் ஏன் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார்?

அவருக்கு ஊரக உள்ளாட்சிகளில் செல்வாக்கு இல்லை. அதனால் போட்டியிடவில்லை.

கிராம சபைக் கூட்டங்களை எல்லாம் நடத்தினாரே?

நடத்தினார். ஆனால் கிராமத்தில் ஒரு சதவீதம்கூட வாக்கு இல்லை அதனால் போட்டியில்லை.

ஆனால், மக்களவைத் தேர்தலில் நல்ல வாக்கு வாங்கினாரே?

ஆமாம். அதெல்லாம் நகர்ப்புற வாக்குகள். கிராமப்புறத்தில் வாக்கு கிடையாது. அதனால் போட்டியில்லை. ஒருவேளை நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடலாம்.

இறுதியாக இரண்டு ஆளுமைகளின் வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதா?

இதுவரை வெற்றிடம் நிரப்பப்படவில்லை. ப்ரொஜக்ட் அண்ட் எலெக்டட் லீடர்ஸ் இன்னும் வரவில்லை. அது வரும்வரை நிரம்பாது. அதாவது ஸ்டாலின்தான் முதல்வர் என்று மக்கள் நினைத்து வாக்களிக்கிறார்கள், அதிமுகவில் யாரை முதல்வராக மனதில் வைத்து மக்கள் வாக்களிக்கிறார்களோ அப்போதுதான் வெற்றிடம் நிரப்பப்படும் என்கிறேன்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இவர்கள் முதல்வர் என என்று மக்கள் வாக்களிக்கிறார்களோ அப்போதுதான் வெற்றிடம் நிரப்பப்படும். முன்னிலைப்படுத்தப்பட்ட முதல்வர் வேட்பாளர் யார் என 2021 தேர்தலில் நின்று யார் வெல்கிறார்களோ அப்போது வெற்றிடம் நிரம்பியதாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x