Published : 08 Jan 2020 02:25 PM
Last Updated : 08 Jan 2020 02:25 PM
தொழிற்சங்கங்கள் நடத்துக்கும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை தல்லாகுள பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இதேபோல் ரயில் மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று (புதன்கிழமை) ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
வெறிச்சோடிக் கிடக்கும் எல்.ஐ.சி. அலுவலகம்
மதுரையில் எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து, சாலையோர வியாபாரிகள், வர்த்தக சங்கங்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக துவங்கி ரயில் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தமுக்கம் மைதானம், தல்லாகுளம் தந்தி அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் - மதுரை ஆர்ப்பாட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிஐடியு, விசிக, எல்பிஎப் உள்ளிட்ட மாநகராட்சி தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மற்றபடி மதுரையில் போக்குவரத்து பாதிப்பு ஏதுமில்லை. அரசுப் பேருந்துகள் வழக்கம்போலவே இயங்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT