Published : 08 Jan 2020 12:22 PM
Last Updated : 08 Jan 2020 12:22 PM
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜன.6-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நேற்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.
அப்போது, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அப்போது, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டார். அப்போது, ஜெ.அன்பழகன், அமைச்சரை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பேரவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்ததையடுத்து அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதன்பின், ஜெ.அன்பழகனின் நேரம் முடிவடைந்ததாக சபாநாயகர் தனபால் கூறினார். அப்போது, ஜெ.அன்பழகன் ஆளுநர் உரையைக் கிழித்து, சபாநாயகரின் மேசையில் போட்டார். இதனால், நடப்புக் கூட்டத்தொடர் மட்டுமின்றி அடுத்த கூட்டத்தொடரிலும் ஜெ.அன்பழகன் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜன 9-ம் தேதி வரை ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
சபாநாயகர் தனபால் சர்வாதிகாரத்துடன் செயல்படுவதாக, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பகழன், 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையைக் கிழித்தெறிந்தது மரபை மீறிய செயல்தானே?
மரபை மீறிய செயல்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னைப் பேச அனுமதித்து விட்டு, என் மீதான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். சபாநாயகர் பேச்சுரிமையைப் பறிக்கிறார். இந்த அரசின் மீதான குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை இரவு, பகலாக குறிப்புகளாகத் தயாரித்து சட்டப்பேரவைக்கு வந்தால், ஆட்சியின் மீது விமர்சனமே செய்யக்கூடாது என சபாநாயகர் சொல்கிறார். என்னைப் பேச அனுமதித்திருந்தால் நான் ஏன் ஆளுநர் உரையை கிழிக்கப் போகிறேன்?
இப்படி ஆளுநர் உரையைக் கிழிப்பது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் கையில் இருந்த பட்ஜெட் நகலைப் பிடுங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிழித்தெறிந்த சம்பவம் எல்லாம் நடந்தது.
அந்த சமயத்தில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் என் கையில் இருந்ததைத்தான் கிழித்து, சபாநாயகரின் மேசையில் போட்டேன். கிழித்து வீசவில்லை. நான் தெரிந்துதான் அந்தத் தவறைச் செய்தேன். சபாநாயகர் சர்வாதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கிறார். இதை அவரிடம் நேரடியாகவே சொன்னேன். இந்த சர்வாதிகாரம் நிலைக்காது என்று சொன்னேன். தன் அதிகாரத்தை சபாநாயகர் தவறாகப் பயன்படுத்துகிறார். நான் குழந்தை இல்லை. 3-வது முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு சபை விதிகள் தெரியும். கண்ணியம் தெரியும். சபாநாயகர் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்காவிட்டால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்படிப் போராட்டங்கள் நிகழாது. இதைத்தான் நான் பேசினேன்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஒருமையில் பேசியதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
நாம் ஒரு கேள்வி எழுப்பினால், அதற்கு 10 அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்கின்றனர். பிறகு உங்கள் நேரம் முடிந்து விட்டது என சபாநாயகர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது என ஆதாரத்துடன் சொன்னோம். ஒரு அதிமுக எம்எல்ஏ தன் தொகுதியில் தோல்வியடைந்ததால், அதிகாரியை மேடையில் வைத்து கடிந்துகொள்கிறார். இதைவிட முறைகேட்டுக்கு என்ன ஆதாரம் வேண்டும்? பல இடங்களில் அதிகாரிகள் விதி மீறியதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிய போது, திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதுதான் திருத்தம் வந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ஆனால், அப்போது, முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களை அந்தத் திருத்தத்தில் புறக்கணிக்கவில்லை. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புரியாமல் பேசுகிறார். அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவருடைய துறை இது அல்ல. இதற்கு முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், முதல்வருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அப்போது எஸ்.பி.வேலுமணி எழுந்தார். என் நேரம் சென்று கொண்டே இருந்தது. 'உட்காருங்கள்' என்பதற்குப் பதிலாக ஒருமையில் பேசிவிட்டேன். அதற்கு அவரும் என்னை மறுமொழியில் ஒருமையில் தான் பேசினார். நான் 'மைக்'கில் சொல்லிவிட்டேன். அவர் 'மைக்'கில் சொல்லவில்லை.
உடனேயே திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து, எனக்காக வருத்தம் தெரிவித்தார். என் தலைவர் எனக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. சொன்னது தவறாக இருந்தால் நானே வருத்தம் தெரிவிக்கிறேன் என்றேன். நான் ஒரு கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், உதயகுமார், துணைமுதல்வர் ஓபன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசுகின்றனர். எதற்கு இத்தனை அமைச்சர்கள் பேசுகின்றனர்? ஒருவர் பதில் சொன்னால் போதாதா? நேரத்தை வீணடிக்கும் உத்தி இது.
சட்டம் -ஒழுங்கில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதை முதல்வர் பழனிசாமி பேரவையில் ஆதாரங்களுடன் விளக்கினாரே?
சட்டம் -ஒழுங்கில் முதலிடம் என முதல்வர் சொன்னார். எப்படிச் சொல்கிறீர்கள் என முதல்வரிடம் கேட்டேன். சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதற்கான ஆதாரங்களை அடுத்து நான் விளக்கத் தயாராக இருந்தேன். பாஜக கூட்டணியில் இருந்துகொண்டு சட்டம்-ஒழுங்கில் முதலிடம் பெறுவது பெரிய விஷயமில்லை. ஒரு பத்திரிகை சொன்னதையும் ஆதாரமாகக் கூறுகிறார். அதே பத்திரிகை அதிமுக அரசை விமர்சிக்கவும் செய்திருக்கிறது. அதை நான் படிக்கவா எனக் கேட்டேன், கூடாது என்றார் முதல்வர். அவர்களுக்குச் சாதகமானதை மட்டும் வாசிக்க வேண்டும் என்கிறார். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதன் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சென்று தான் தடை வாங்கினார்.
ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மாறி மாறி விமர்சனம் வைத்தால் அவையை ஆக்கபூர்வமாக நடத்துவது எப்போது?
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டப்பேரவையை ஆக்கபூர்வமாக நடத்தவில்லை. அவர்களுக்குச் சாதகமாகப் பேச வேண்டும். சட்டப்பேரவை நாட்களைக் கடத்த வேண்டும். மயிலிறகால் தடவிக்கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கின்றனர். எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளைத்தான் முன்வைக்க முடியும். நான் எப்படி அவர்களை வாழ்த்த முடியும்? அதற்குதான் அவர்கள் ஆட்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் குற்றங்களை எடுத்துக்காட்டத்தான் நாங்கள் இருக்கிறோம். பரிசுத்தமான இயேசுவா அவர்கள்? கேள்வியே கேட்கக்கூடாது என்றால் என்ன ஜனநாயகம்? நாம் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கீடு செய்கின்றனர். சபையில் நடப்பது மக்களுக்குத் தெரிவதில்லை நேரலையும் கிடையாது.
இரண்டு நாட்களாக திமுக வெளிநடப்பு செய்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்?
வெளிநடப்பு என்பது ஜனநாயகத்தில் எதிர்ப்பைக் காட்டுவதற்காக செய்யக்கூடிய வழக்கமான நடைமுறைதான். வெளிநடப்பு செய்துவிட்டு திரும்பவும் 2 நிமிடங்களில் உள்ளே சென்று விடுவோம். எல்லோரும் வெளிநடப்பு என்றால் வீட்டுக்குப் போய் விடுவோம் என நினைக்கின்றனர். சபாநாயகரோ, ஆட்சியோ எங்கள் குரலுக்கு செவிமடுக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்வோம். ஒரு நாளைக்கு 10 முறை கூட வெளிநடப்பு செய்வோம். இதைப் புரிந்து கொள்ளாமல் சட்டப்பேரவை செல்வதே வெளிநடப்பு செய்வதற்காகத்தான் என விமர்சிக்கின்றனர்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT