Published : 07 Jan 2020 07:32 PM
Last Updated : 07 Jan 2020 07:32 PM
எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய பரமத்தி குஞ்சாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண், பாரதப் பிரதமரிடம் முன்னோடி விவசாயி எனும் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கபிலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி பி.பாப்பாத்தி (61). இவர் கடந்த 2017-18 ஆம் ஆண்டு இவர் தனக்குச் சொந்தமான 1 ஹெக்டேர் நிலத்தில் எள் சாகுபடி செய்துள்ளார். வேளாண் துறையின் ஆலோசனையின் பேரில் சாகுபடி செய்த பாப்பாத்தி, ஹெக்டேருக்கு 1,210 கிலோ மகசூல் எடுத்துள்ளார். இதைக் கணக்கிட்ட வேளாண் துறையினர் தமிழக அளவில் அதிக மகசூல் எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அளித்துள்ளனர்.
இதை மத்திய அரசின் விருதுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த விழாவில் இந்தியப் பிரதமர் மோடி, விவசாயி பாப்பாத்திக்கு கிரிஸி கர்மான் எனும் முன்னோடி விவசாயி விருது மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியிடம், பாப்பாத்தி விருது பெற்றிருப்பது கிராம மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளளது.
இதுகுறித்து விவசாயி பாப்பாத்தி கூறுகையில், ''எனக்கு ஜெயா, ரமேஷ் என ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் பொன்னுசாமி உயிரிழந்தார். இதையடுத்து கணவர் மேற்கொண்டு வந்த விவசாயத் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினேன். கடந்த 2017-18 ஆம் ஆண்டு எங்களது நிலத்தில் எள் சாகுபடி செய்தோம்.
இதைப் பார்வையிட்ட வேளாண் துறையினர் அதிக மகசூல் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்காக பிரதமர் மோடியிடம் இம்மாதம் 2-ம் தேதி விருது பெற்றேன். இந்த விருது பெற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
இதுகுறித்து பாப்பாத்தி மகன் பி. ரமேஷ் கூறுகையில், ''வேளாண் துறையின் ஆலோசனையின்படி இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1 ஹெக்டேரில் 1,210 கிலோ எள் கிடைத்தது. இதைப் பார்வையிட்ட வேளாண் துறையினர் தமிழக அளவில் எண்ணெய் வித்துப் பயிரில் அதிக மகசூல் எடுத்திருப்பதாக தெரிவித்து விருதுக்குப் பரிந்துரைத்தனர். இதையடுத்து இம்மாதம் 2-ம் தேதி கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த விழாவில் பாரதப் பிரதமர் மோடி எனது தாயாருக்கு முன்னோடி விவசாயி என்ற விருது வழங்கினார். எனது தாயார், பிரதமரிடம் விருது பெற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT