Published : 07 Jan 2020 06:15 PM
Last Updated : 07 Jan 2020 06:15 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தத் தயார் என்று சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிற்பகலுக்குப் பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. அப்போது, பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 2003-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது திமுக அதனை ஆதரித்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. ஏதாவது பாதிப்புகள் நேர்ந்தால், அதனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 'எப்போதோ நடக்கப் போகிறது, இப்படி செய்யப் போகிறீர்கள்' என கனவு கண்டுகொண்டு, நீங்கள் கண்ட கனவை தாயாக, பிள்ளையாக பழகிக்கொண்டிருக்கும் சிறுபான்மையினரை நீங்கள் (எதிர்க்கட்சியினர்) அல்லோலப்படுத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்புகளும் நேராது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT