Published : 07 Jan 2020 03:16 PM
Last Updated : 07 Jan 2020 03:16 PM
சட்டம்-ஒழுங்கில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்வதாக, சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.7) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.
அப்போது, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அப்போது, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட முயன்றபோது, ஜெ.அன்பழகன் அமைச்சரை ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "எந்த ஆதாரத்தை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறீர்கள். புள்ளி விவரத்தோடு மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகிறோம்.
திமுக ஆட்சியிலே எப்படி நடந்தது? உங்கள் மேல் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். திருப்பூரில் என்னென்ன செய்தீர்கள்? அதை எல்லாம் பேசுவது என்றால் சரியான முறையாக இருக்காது. நீங்கள் உள்நோக்கத்தோடு பேசுவதை விட்டுவிட்டு, உண்மை நிலையை எடுத்து சொல்லுங்கள்.
சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நாங்கள் சொல்லவில்லை, மத்திய அரசு ஆய்வு செய்து கொடுத்திருக்கிறது. ஆங்கில பத்திரிகை ஒன்றும் சொல்லியிருக்கிறது.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று தான் வருகிறார்களே தவிர, உண்மை நிலையை எடுத்து சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. உங்களை பற்றி நாங்கள் பேசினால் தேவையில்லாத விவாதம் தான் ஏற்படும்.
ஜெ.அன்பழகன் எப்பொழுது அவையில் பேசினாலும், அவர் சொல்லுகின்ற கருத்திற்கு தான் பிரச்சினையே உருவாகிறது. ஆளுநர் உரை மீது பேசியிருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது. அதற்கு மீறி பேசும் போது தான் இந்த பிரச்சினையே உருவாகின்றது. அவர் தனிப்பட்ட முறையிலே அமைச்சரை விமர்சனம் செய்யும் போது தான் இந்த பிரச்சினையே உருவாகின்றது. சுமூகமாக நடைபெற்று கொண்டு இருக்கின்ற சூழ்நிலையை மாற்றி ஜெ.அன்பழகன் திசை திருப்ப பார்க்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல் சரியான முறையிலே நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை சொன்னார். எந்த இடத்திலும், எந்த தவறும் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள் தான் இந்த வாக்குகளை எண்ணினார்கள். அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா? ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாக்குகளை எண்ணினார்கள். காலை 8 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 10 மணி வரை நின்று கொண்டே வாக்குகளை எண்ணினார்கள்.
அத்தனை முகவர்களுமே, தடுப்பு அமைக்கப்பட்டு, வெளியே நின்று தான் பார்க்கிறார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. சுயேட்சையாக இருந்தாலும் சரி.
என்னுடைய தொகுதியிலே, நங்கவள்ளி ஒன்றியத்திலே 2 ஒன்றிய கவுன்சிலர், ஒருவர் 11 வாக்குகளிலே தோல்வியுற்றார், மற்றொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலே தோல்வியுற்றார். அதற்கு மறுவாக்கு எண்ணிக்கை கூட எண்ணப்படவில்லை. இரண்டு பேரும் மனு கொடுத்தனர், பிறகு கூட எண்ணப்படவில்லை.
இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டு இருக்கிறது. அந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டு இருக்கின்றார்கள். அதனால் தான் சுமார் 450 சுயேட்சைகள் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எந்த கட்சியும் சேராதவர்கள். ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை பொறுத்தவரைக்கும் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. 1.59 சதவிகிதம் வாக்குகள் தான் வித்தியாசமாக இருக்கிறீர்கள். அதேபோல மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 39.60 சதவிகிதம் வாக்குகள் அதிமுக கூட்டணி பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி 40.35 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75 சதவிகிதகம் தான் நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறீர்கள்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT