Published : 07 Jan 2020 02:08 PM
Last Updated : 07 Jan 2020 02:08 PM

தசை பாதிப்பு நோயிலிருந்து குழந்தையை மீட்ட மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்: 7 மாதங்கள் வெண்டிலேட்டர் சிகிச்சை- தென்னிந்தியாவில் இதுவே முதல் முறை

இடது: மதுரை அரசு பொது மருத்துவமனை டீன் சங்குமணி, வலது: குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவு தலைவர் பேராசிரியர் பாலசங்கர் | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

உடலில் உள்ள அனைத்து தசைகளும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய குழந்தைக்கு தொடர்ந்து 7 மாதங்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை கொடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.1.5 கோடி வரை செலவாகியிருக்கும்.

7 மாதங்களாக செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தையைக் காப்பாற்றுவது தென்னிந்தியாவிலே அரசு மருத்துவமனை அளவில் இதுவே முதன்முறை என்று மருத்துவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

மதுரை பசுமலையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. கூலி வேலை பார்க்கிறார். இவரது 2 ½ குழந்தை விக்னேஸ்வரனுக்கு தொடர்ந்து காய்ச்சல், கை, கால் வலி ஏற்பட்டிருந்தது. அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. கடந்த 8 மாதத்திற்கு முன் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவில் உள் நோயாளியாக குழந்தையை சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில் அந்தக் குழந்தைக்கு கை, கால் மற்றும் உடலிலுள்ள அனைத்து தசைகளும் பலமிழந்து (Paralysis of all the muscles) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைக்கு குல்லியன் பாரி சின்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற தசைகளை பலமிழக்கச் செய்யும் நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நோய் குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடியது. குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு தலைவர் பால சங்கர் தலைமையில் மருத்துவர்கள் எம்.பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், நந்தினி குப்புசாமி மற்றும் உதவிப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவ்வப்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த நிலையில் மீண்டும் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. அதனால், கடந்த 7 மாதமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் 2 ½ வயது குழந்தை விக்னேஸ்வரனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடனே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அந்தக் குழந்தை பூரண குணமடைந்தால் இன்று பெற்றோருடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றதை ஒட்டி மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவு தலைவர் பேராசிரியர் பாலசங்கர் தலையிலான மருத்துவக் குழுவினரை ‘டீன்’ சங்குமணி பாராட்டினார்.

ரூ.1 ½ கோடி செலவாகி இருக்கும். ..

‘டீன்’ சங்குமணி கூறுகையில், ‘‘தசைகளை பலமிழக்கச் செய்யும் நோய் தாக்கப்படும் குழந்தைகள் மாதத்திற்கு ஒரிரு குழந்தைகள் சிகிச்சைக்கு வரும். ஆனால், இந்தக் குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சையில் அடிக்கடி கிருமி தொற்று ஏற்பட்டு சளி அடைப்பு ஏற்பட்டு மூச்சுதிணறல் ஏற்படும்.

அதனால், கிருமி தொற்று வராமல் பாதுகாப்பதே பெரும் சவாலாக இருந்தது. குழந்தைக்கு இம்முனோகுளோபுலின், மீத்தைல் பிரட்னிசலோன் போன்ற விலையுயர்ந்த மருந்துகளைக் கொடுத்தோம். குழந்தையால் தானாக சுவாசிக்க முடியாதததால் வெண்டிலேட்டர்(செயற்கை சுவாசம்) மூலமாக சுவாசம் அளிக்கப்பட்டது.

அவ்வப்போது நிமோனியா காய்ச்சல் திடீரென்று வந்ததோடு கால், கை தசை, கழுத்து தசை நார்கள் வழுவிழுந்து காணப்பட்டது. மூச்சு விடவே குழந்தை சிரமப்பட்டதால் சுவாச தொற்று நோய்க்காக விலையுர்ந்த ஆண்டிபயோட்டிக் மருந்துகளும், மூக்கு வழியாக வயிற்றுக்கு செலுத்தப்பட்ட குழாய் மூலமாக தேவையான உணவுகளும் அளிக்கப்பட்டது.

மேலும், இயன்முறை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பிறகு மெதுவாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவில் இருந்து கடந்த டிசம்பர் முதல் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்தோம்.

தற்போது குழந்தையால் தானாக வாய் வழியாக சாப்பிட முடிகிறது. மற்றவர் கையை பிடித்துக் கொண்டு நடக்கவும் ஆரம்பித்துவிட்டது. ஒரு குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 7 மாதமாக செயற்கை சுவாசம் மூலம் அளித்து அந்த குழந்தையை காப்பாற்றியது தென் இந்தியாவிலே அரசு மருத்துவமனைகள் அளவில் இதுவே முதல் முறை.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு செயற்கை சுவாசம் அளிக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். அந்த வகையில் மருந்து மாத்திரைகள், படுக்கை அறை, செயற்கை சுவாசம் வகையில் தனியார் மருத்துவமனையில் இந்த குழந்தை சிகிச்சை பெற்றிருந்தால் ரூ.1 ½ கோடி செலவாகி இருக்கும்.

இது அத்தனையும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாகக் குழந்தைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

குழந்தையின் தந்தை ராமமூர்த்தி கூறுகையில், ‘‘7 மாதமாக குழந்தை மூச்சுவிடாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து நாங்கள் குழந்தை மீண்டும் உயிரோடு எங்கள் கையில் கிடைப்பானா? என்று பதட்டத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கழித்தோம்.

ஆனால், மருத்துவர்களும், செவிலியர்களும் எங்க குழந்தையை கண்ணும் கருத்துமாக 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டதோடு குழந்தையை மீட்டுக் கொடுத்துள்ளனர். என்றும் இந்த அரசு மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x