Published : 06 Jan 2020 11:47 AM
Last Updated : 06 Jan 2020 11:47 AM
தென் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சரிவை சந்தித்துள்ளதால் இழந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்க முதல்வர், துணை முதல்வர் தலையீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மதுரை அதிமுகவினர்.
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்காண காரணங்களைக் கண்டறிய முதல்வர், துணை முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்தி உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகளை களையெடுப்பு நடவடிக்கை எடுப்பார்களா? என்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் கையே ஓங்கியது. அதிகமான மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்களை திமுக கைப்பற்றியது.
மதுரையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை திமுகவே கைப்பற்றும் வாய்ப்புள்ளது. அதபோல், அதிமுகவுக்கு இணையாக ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், எம்.பி. தேர்தல் என்று அதிமுக மதுரையில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக சரிவை சந்தித்துள்ளது.
இதற்கு அதிமுகவின் மாவட்ட முக்கிய அதிகார மையங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலும், ஒருங்கிணைந்த தேர்தல் பணியும் இல்லாததாலே உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
இதே மனநிலையில் அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தால் அக்கட்சிக்கு மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் மேலும் பின்னடைவு ஏற்படும் நிலை உள்ளது. தென் தமிழகத்தில் அதிமுகவுக்கு மதுரை முக்கியமான மாவட்டம். இந்த மாவட்டத்தில் வாக்குவங்கியை கோட்டை விட்டால் அது அடுத்தடுத்து மற்ற தென் மாவட்டங்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தென் மாவட்டங்களில் தேனியைத் தவிர மற்ற மாவட்ட நிர்வாகிகள் முழுக்க முழுக்க முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்களாகவே உள்ளனர். அதனால், ஓ.பன்னீர் செல்வம், தேனி மாவட்டத்தை தாண்டி மற்ற தென் மாவட்ட கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை.
அதிமுக கோட்டையாக தொடரும் தேனி..
ஆனால், அவரது தேனி மாவட்டத்தை அவர் அதிமுக கோட்டையாக வைத்துள்ளார். தேனி எம்பி தேர்தலில் போட்டியிட்ட மகன் ரவீந்திரநாத் குமாரை வெற்றிப் பெற வைத்துள்ளார். தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வெற்றியை தேடி தந்துள்ளார்.
கோட்டைவிடும் அபாயத்தில் மதுரை..
ஆனால், தென் மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தல் களப் பணிகளில் தொடர்பாக ஆலோசனையை கேட்பதில்லை. முழுக்க முழுக்க அவர்கள், தனிப்பட்ட நிலைபாடுகளில் செயல்படுகின்றனர். மேலும், அவர்களுக்குள், மாவட்டத்தில் யார் பெரியவர் என்ற அதிகார போட்டி தலைதூக்கி உள்ளதால் கட்சிக்குள் கோஷ்டிபூசல் அதிகரித்துள்ளது.
ஒருவர் ஒருவரை வீழ்த்த, தேர்தலில் திரைமறைவில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளை பார்க்கின்றனர். அவர்களை ஜெயலலிதா போல் அதட்டி வேலைவாங்கவும், நடவடிக்கை எடுக்கவும் கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.
அப்படியே விட்டால் வரவிருக்கிற மநாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் தென் மாவட்டங்களில் தற்போதுபோல் அதிமுக கோட்டை விட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு காணவும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைளில் ஈடுபடுவோரை களையெடுக்கவும் முதலமைச்சர் கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மதுரையில் வைத்து தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதில் வெளிப்பயைடாக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாகிகள் சொல்லும் ஆலோசனை..
அவர்கள் கூறுகையில், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு அதிக சட்டமன்ற தொகுதிகள் கிடைத்தது. தற்போது தேனியை தவிர அதிமுகவுக்கு சொல்லிக்கொள்ளும்படி செல்வாக்கான மாவட்டம் தென் மாவட்டங்களில் இல்லை. இதை சரி செய்ய, தாமதிக்காமல் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் நிர்வாகிகளை சந்திக்க, தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும். மாவட்டங்கள் தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தமுடியாவிட்டாலும் மதுரையில் வைத்து தென் மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தி கட்சியின் பின்னடைக்கு காரணம் என்பதை விவாதிக்க வேண்டும்,’’ என்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுகவினர், கே.கே.நகர் எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணித்தனர். அப்போது செல்லூர் கே.ராஜூ கூறுகையில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் பணியில் அதிமுகவினர் இன்னும் முனைப்போடு செயல்பட்டிருந்தால் மேலும் வெற்றியை பெற்றிருக்க முடியும்.
அதிமுகவினர் கட்டுக்கோப்புடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் இணைந்து பணியாற்ற வேண்டும், ’’ என்று கட்சியினருக்கு உருக்கமான வேண்டுகோளை முன் வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT