Published : 06 Jan 2020 11:28 AM
Last Updated : 06 Jan 2020 11:28 AM
நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தனது உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஆளுநர் உரை தொடங்கியதும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதையடுத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள். தமிழக மக்களுக்கு இந்தாண்டு அமைதியையும் முன்னேற்றத்தையும் வழங்க வாழ்த்துகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் ஆட்சியை தொடர்கிறார். தமிழகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 18 பெரிய மாநிலங்களுள் தமிழகம் அரசு நிர்வாகத்தில் முதலிடம் பிடித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம். 'இந்தியா டுடே' ஆய்விலும் தமிழக அரசு முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த சாதனைகளுக்காக முதல்வர் பழனிசாமியை வாழ்த்துகிறேன்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற 9 மாவட்டங்களுக்கும் நகராட்சிகளுக்குமான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.
சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக, அத்திவரதர் வைபவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா, இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுர சந்திப்பு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு முறையாக செய்யப்பட்டிருந்தது"
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT