Published : 05 Jan 2020 12:24 PM
Last Updated : 05 Jan 2020 12:24 PM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய திருநாளான சொர்க்க வாசல் திறப்பு நாளை(ஜன.6) அதிகாலை நடைபெறவுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் பெருமையை உடையது ரங்கம் ரங்கநாதர் கோயில்.
இங்கு நடைபெறும் உற்சவங்களில் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழா கடந்த டிச.26-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பகல் பத்து திருநாள் டிச.27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நாட்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ஜூன மண்டபத்துக்குச் சென்று நாள் முழுவதும் அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து 10-ம் திருநாளான இன்று முக்கிய உற்சவங்களில் ஒன்றான மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) நடைபெறவுள்ளது.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய உற்சவமான சொர்க்க வாசல் திறப்பு நாளை (ஜன.6) அதிகாலை நடைபெறவுள்ளது. அன்று மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடும், அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து காலை 5 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம், 6.15 மணிக்கு சாதரா மரியாதை, 7.15 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருவார். காலை 8.15 மணிக்கு பொது ஜன சேவை நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு அரையர் சேவை, இரவு 7.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்று இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, வீணைவாத்தியத்துடன் ஜன.7-ம் தேதி அதிகாலை 12.45 மணிக்குமூலஸ்தானத்தை சென்றடைவார். அன்று முதல் ராப்பத்துதிருநாள் தொடங்கி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT