Published : 04 Jan 2020 06:17 PM
Last Updated : 04 Jan 2020 06:17 PM
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் சொந்த மண்ணில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர். பல அமைச்சர்கள் சொந்த மாவட்டத்தில் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளனர். பலர் கோட்டை விட்டுள்ளனர்.
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை யாரும் நிரப்பவில்லை எனப் பலரும் பேசி வரும் நிலையில் இரு தலைவர்களின் வாரிசுகள் நாங்கள் என இரு தரப்பிலும் நிலைநட்டியுள்ளனர். அதிலும் தங்களது சொந்த மாவட்டங்களாகக் கருதும் மாவட்டங்களில் காலூன்றி நிரூபித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் வெடித்த விவசாயிகள் மக்கள் போராட்டம் நீதிமன்றம் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைத்தது. ஆனால், இந்தத் திட்டத்தால் ஆளுங்கட்சியின் மீதிருந்த கோபம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தனக்கான செல்வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க வைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கான தேர்தலில், அதிமுக 18 இடங்கள், அதன் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்கள் என 23 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 131 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 45 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
மொத்தமாக அதிமுக கூட்டணி 176 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 76 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 20 ஊராட்சி ஒன்றியங்களில், 16 ஒன்றியங்களின் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றுகிறது. 4 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நீடிக்கிறது.
முதல்வரின் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணா புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது. மேலும், எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில், அதிமுக 12 வார்டுகளிலும், 1 வார்டில் திமுகவும் வெற்றி பெற்றன.
இதற்கு இணையாக திமுக தலைவர் கருணாநிதியின் மாவட்டமான திருவாரூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள அத்தனை மாவட்டக் கவுன்சில்களையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
முன்னர் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் அதிமுக வசம் இருந்தன. இம்முறை அத்தனையிலும் திமுக வென்றுள்ளது. திருவாரூரில் 18 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை திமுகவும், 3 இடங்களை அதிமுகவும் வென்றுள்ளன. 2011 தேர்தலில் 18-க்கு 12 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 3 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த மாவட்டத்தில் வென்றதன் மூலம் தனது மாவட்டத்தில் வென்ற பெருமையை ஸ்டாலின் நிலை நாட்டியுள்ளார். இம்மாவட்டத்தின் அமைச்சர் அமைச்சர் காமராஜ் ஆவார்.
இதேபோன்று நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 15 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6 இடங்களைப் பெற்றது. 2011 தேர்தலில் 21-க்கு 14 இடங்களை வென்ற அதிமுக தற்போது 6 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 28 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 22 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 6 இடங்களில் அதிமுக வெற்றி. 2011 தேர்தலில் 28-க்கு 27 இடங்களை வென்ற அதிமுக தற்போது 6 இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது பெரும் பின்னடைவாகும். இம்மாவட்ட அமைச்சர் துரைக்கண்ணு, வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் ஆவர்.
டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கமும், காவிரிப் பிரச்சினையும் சூடு ஆறாமல் இருப்பதே அங்கு திமுக வலுவாகக் காலூன்றக் காரணம் என்கின்றனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 22 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை திமுகவும், 8 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது. 2011 தேர்தலில் 22-க்கு 20 இடங்களை வென்ற அதிமுக, தற்போது 8 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இம்மாவட்ட முக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவார்.
திருச்சி மாவட்டத்தில் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி இரண்டுபேர் அமைச்சராக உள்ளனர். இங்கு இரு தேர்தல்களிலும் திமுக வலுவாக காலூன்றியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், உள்ளாட்சித் தேர்தலாகட்டும் நாங்கள்தான் என ஓபிஎஸ் தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளார். தமிழகமே ஒருபக்கம் நின்றபோது அதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியைப் பெற்றுத் தந்தது தேனி மாவட்டம்தான். அதேபோன்று தேனியில் மாவட்டக் கவுன்சிலையும் ஓபிஎஸ் தக்கவைத்துள்ளார்.
இம்மாவட்டத்தில் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் எந்த பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று கரூர் செந்தில் பாலாஜியும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரவில்லை.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் தங்கள் மாவட்டங்களை வலுவாக வைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, துரைக்கண்ணு, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தங்கள் மாவட்டங்களில் அதிமுகவுக்குப் போதிய வெற்றியைத் தேடித் தரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT