Published : 04 Jan 2020 02:07 PM
Last Updated : 04 Jan 2020 02:07 PM

பிரசாந்த் கிஷோர் விவகாரம்: கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் வேலைக்கு வைத்திருக்கின்றனர்; சீமான் விமர்சனம்

சீமான் - ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் திமுக இன்னொருவரைக் கூலியாக வேலைக்கு வைத்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜன.4) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.வி.என். திருமண மண்டபத்தில் சீமான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னதாக, சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் தாக்கம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலித்திருப்பதாக எண்ணுகிறீர்களா?

அதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக நடத்திய நாடகத்தை மக்கள் ரசித்திருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். இச்சட்டத் திருத்தத்தை முதன்முறையாக வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரும்போது அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது திமுக. ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமையை திமுக பேசுகிறது. இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவில்லையென்றால் திமுக இதனைப் பேசியிருக்குமா? இதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா?

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் கூட்டணியாக இருந்த கட்சி திமுகதான். அப்போதெல்லாம் இதனைப் பேசாமல் என்ன செய்துகொண்டிருந்தனர்? இதற்குப் பதிலில்லை. இப்போது முஸ்லிம்கள் மீது பெரிய கருணை இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர். இது பிரசாந்த் கிஷோர் மாதிரியான ஆட்களின் வேலைத்திட்டமாகக் கூட இருக்கலாம். கருணையுடன் பேசுபவர்தான் நம் தலைவர் என நம்புகிற நிலை முஸ்லிம்களுக்கு உண்டு. திமுக போல முஸ்லிம்களுக்கு ஆபத்தான கட்சி இந்த நிலத்தில் எதுவுமே இல்லை.

திமுக பெற்றது போன்று முஸ்லிம்கள் மீதான நம்பிக்கையை நாம் தமிழர் கட்சி ஏன் பெறவில்லை?

நாங்கள் வளர்கிற பிள்ளைகள். திமுக மீதான நம்பிக்கை கட்டிடமாக கட்டப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போதுதான் கட்டிக் கொண்டிருக்கிறோம். முஸ்லிம் அமைப்புகள் எல்லாமே திமுகவுடன் கூட்டணியில் உள்ளன. அதனால் அந்தத் தலைவர்கள் சொல்வதை முஸ்லிம்கள் கேட்கின்றனர். இளைஞர்கள் எங்களுடன்தான் பயணிக்கின்றனர்.

பிரசாந்த் கிஷோர் போன்று தேர்தல் ஆலோசனைக்காக நாம் தமிழர் கட்சி யாரையாவது நியமிக்குமா?

நாங்கள் உலகத்தையே ஆள்வதற்கான அறிவு பெற்றிருக்கிறோம். இன்னொருவரின் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் அல்ல. மக்களுக்கு உள்ளத் தூய்மையுடன் சேவை செய்ய வந்திருக்கிறோம். அப்படிச் செய்திருந்தால் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குத் தேவையில்லை. கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் இன்னொருவரைக் கூலியாக வேலைக்கு வைத்திருக்கின்றனர். அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எண்ணி முடிப்பதற்குள்ளேயே இறந்துவிடுவோம் போலிருக்கிறது.

நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் திமுக கருத்து தெரிவிக்கவில்லையே?

திமுக கருத்து தெரிவிக்காது. காங்கிரஸ் கட்சியே தெரிவிக்கவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவர் நெல்லை கண்ணன். அந்தக் கட்சியின் நிலைப்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிவிட்டார். காங்கிரஸில் இருந்து கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார். எங்களின் ஈழ விடுதலையை ஆதரித்தவர் அல்ல நெல்லை கண்ணன். அதில் நாங்கள் எப்போதும் முரண்படுவோம். ஆனால், அவரைப் போல தமிழறிஞர் சமகாலத்தில் இல்லை. அவரைக் கைது செய்தது கொடுமையான செயல். இது தமிழுக்கும், தமிழினத்திற்குமான அவமானம்.

'உள்ளே இருந்து கல்லெறிந்தால் நாங்கள் வெளியே இருந்து குண்டெறிவோம்' என ஹெச்.ராஜா சொன்னார். இதை விட வன்முறையைத் தூண்டும் பேச்சு இருக்க முடியாது. வன்முறையத் தூண்டும் பேச்சுக்கு கைது என்றால் பாஜகவில் யாரும் வெளியே இருக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் இருக்க வேண்டும். யாருடைய திருப்திக்காகவோ செய்யப்பட்டது இந்தக் கைது நடவடிக்கை. அவரின் முதுமையைக் கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x