Published : 04 Jan 2020 01:51 PM
Last Updated : 04 Jan 2020 01:51 PM
ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜன.4) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.வி.என். திருமண மண்டபத்தில் சீமான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னதாக, சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2021 சட்டப்பேரவை தேர்தலை எப்படி வலிமையுடன் எதிர்கொள்வது, நீண்ட நெடுங்காலமாக தமிழ்த்தேசிய மக்கள் கொண்டிருக்கும் தன்னாட்சி உரிமை, தமிழீழ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, தமிழர் நில வளப் பாதுகாப்பு, தமிழக மக்களின் எதிர்கால பாதுகாப்பான நல்வாழ்வு இதுகுறித்தெல்லாம் இக்கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம்.
2020-ன் தொடக்கத்தில், பொதுக்குழு கூடுவது புத்தெழுச்சி தருவதாக அமையும். இம்மாத இறுதியிலேயே, சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 இடத்தில் சரி சமமாக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை முடிவு. அதன்படி, பெண்களுக்கு வாய்ப்பளித்து தேர்தலை எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
அப்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சீமான், "எங்களுக்குப் பின்னடைவு என சொல்ல முடியாது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் சாதி, பணம் அதிகமாக வேலை செய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
நாங்கள் மக்களவையில் பெற்ற 4 சதவீத வாக்குகளில் இருந்து 10 சதவீதத்திற்கு முன்னேறியிருப்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி. 120-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். பல இடங்களில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை வென்றுள்ளோம். நாகர் கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை எங்கள் கட்சி வென்றுள்ளது. இரு பெரும் கட்சிகள், பணபலத்தைத் தாண்டி நாங்கள் வெல்வது பெரிய மாற்றம் தான்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT