Published : 04 Jan 2020 07:27 AM
Last Updated : 04 Jan 2020 07:27 AM
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவியும் வெற்றி பெற்றார். 80 வயது மூதாட்டிகளும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அந்த வகையில் மதுரை அருகே அரிட்டாபட்டி கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளர்களை தோற்கடித்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரைக்கு அருகே அவர் வசிக்கும் அரிட்டாபட்டி கிராமத்துக்குச் சென்று சந்தித்தோம்.
இந்த வயதிலும் மூதாட்டி வீரம்மாள், வயல் வேலைக்குச் சென்று களையெடுத்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளை செய்கிறார். வீட்டில் அவருக்கு தேவையான சாப்பாட்டை அவரே சமைக்கிறார். ஏழை மக்களுக்கு இலவசமாக நாட்டு வைத்தியம் பார்க்கிறார். யாருக்கு என்ன உதவியென்றாலும் ஓடோடிச் சென்று உதவுகிறார் என்று அந்த ஊர்மக்கள் அவரைப் பற்றி புகழ்ந்தனர்.
முழுக்க முழுக்க பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வீரம்மாளுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பாண்டி விவசாயம் செய்கிறார். இரண்டாவது மகன் மோகன் டாஸ் மாக்கில் பணிபுரிகிறார். மருமகள் காவல்துறையில் பணிபுரிகிறார்.
கடந்த 2006, 2011-ம் ஆண்டு களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வீரம்மாள் தோல்வியடைந்தார். விரக்தியில் வீட்டில் முடங்கிவிடாமல் தற்போது நடந்த கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
வீரம்மாளிடம் உரையாடிய போது, தன்னம்பிக்கையுடன் அவர் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: உங்களை விட இளம் வயது வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், உங்களை எப்படி மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
பதில்: எங்க வீட்டுக்காரரு, ஒரு முறை இதே பஞ்சாயத்தில் துணைத்தலைவராக இருந்து ஊருக்கு நல்லதை செய்திருக்காரு. அவருக்கு பஞ்சாயத்து தலைவராக வேண்டும்னு ஆசை. அவரது ஆசை நிறைவேறவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற வதற்காகவே இரண்டு முறை நான் போட்டியிட்டேன். தோத்துப்போயிட்டேன். பசங்க வெறுத்துப்போயிட்டாங்க. இந்த முறை போட்டியிட வேண்டாமுன்னு சொன்னாங்க. ஆனா, நான்தான் பிடிவாதமாக போட்டியிட்டேன். என்னோட சின்னம் கத்தரிக்காய். இந்த சின்னத்தை ஊருல எந்த இடத்திலயும் வரையல. ஒரு துண்டுபிரசுரம் கூட அடிக்க வில்லை. ஆனால் வீடு வீடாகப் போய், இரண்டு முறை போட்டி யிட்டேன். என்னை நம்பாமல் மற்றவங்களை தேர்ந்தெடுத்தீங்க. அந்த இரண்டு முறையும் என்னை எதிர்த்து ஜெயிச்சவங்க ஊருக்கு எதுவும் செய்யலை.
இந்த முறையாவது எனக்கு வாய்ப்பு தாங்கனு கேட்டேன். நான் ஊருக்கு நல்லது செய்வேன்னு நம்பி ஜனங்க என்னை ஜெயிக்க வைத்திருக்காங்க. அவங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
கே: என்ன படித்து இருக்கீங்க, எழுதப் படிக்க தெரியுமா?
ப: மூன்றாம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். கையெழுத்து மட்டும் போடுவேன். ஆனா, சுயமா ஊருக்கு எது நல்லது, கெட்டதுன்னு முடிவெடுக்கத் தெரியும். அது போதாதா? படிச்சவங்க மட்டும்தான் தேர்தலில் போட்டியிடனுமா?
கே: ஊராட்சியில் தீர்மானம் கொண்டு வருவது, அரசிடம் இருந்து வரும் கடிதங்களை படிப்பது, திட்டங்கள் குறித்து பிடிஓவிடம் பேசுவதற்கு, மனு எழுதுவதற்கு என்ன செய்வீர்கள்?
ப: அதற்கு என்னோட வார்டு மெம்பர்கள் உதவுவாங்க.
கே: ஊராட்சித் தலைவர் என்றால் அனைத்து வார்டுகளுக்கும் போக வேண்டும். ஆட்சியர் அலுவலகம், பிடிஓ அலுவலகத்துக்கு அடிக்கடி அலைந்து திரிய வேண்டுமே?
ப: எனக்கு எந்த நோயும் இல்லை. இப்பவும் வயல் வேலைகளுக்குச் செல்கிறேன். நாட்டு வைத்தியம் பார்க்கிறேன். வயசு எனக்கு ஒரு பிரச்சினையில்லை. என்னால் நடமாட முடியாது என்றால் மக்கள் தேர்ந்தெடுத்து இருப்பார்களா?
கே: தேர்தலில் எந்த வாக்குறுதி களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தீர்கள்?
ப: குடிநீர் பிரச்சினைய தீர்ப்பேன். சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்காமல் இருக்க கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ரோடு வசதி செய்து தருவேன்னு உறுதியளித்திருக்கேன். அதை கட்டாயம் நிறைவேற்றுவேன்.
இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழும் வகையில் ஊருக்கு நல்லது செய்ய தேர்தலில் வெற்றி பெற்ற வீரம்மாளை வாழ்த்த பலர் அவரது வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நாமும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விடைபெற்றோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT