Published : 03 Jan 2020 09:09 PM
Last Updated : 03 Jan 2020 09:09 PM
கைக்குழந்தையுடன் சென்னையில் இருசக்கர வாகனத்தில் சுற்றி உணவு சப்ளை செய்யும் இளம்பெண்ணின் நிலையை இந்து தமிழ் ஆன்லைனில் பதிவு செய்ததை பார்த்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அவரை நேரில் அழைத்து பேசி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் உபெர், ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற பல தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்களிலிருந்து நேரடியாக வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தப்பணியில் சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதில் பெண்கள் ஈடுபடுவது மிகவும் குறைவு. காரணம் வாகனம் ஓட்டுவது, வாடிக்கையாளர்களில் சிலர் முரட்டுத்தனமாக இருப்பார்கள், பாதுகாப்பு காரணங்களும் உண்டு. இதையெல்லாம் மீறி வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் கைக்குழந்தையுடன் உணவு விநியோகிக்கிறார் வள்ளி.
சாலையில் இருசக்கர வாகனத்தில் குழந்தையை பெல்ட் போட்டு கட்டிக்கொண்டு உணவு சப்ளை பையையும் முதுகில் சுமந்து செல்லும் பெண்ணை வாகன ஓட்டிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். பாராட்டவும் செய்கின்றனர்.
சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் வள்ளி (37). இவரது கணவர் தினகரன் (39). இவர் தனியார் ஏடிஎம்மில் செக்யூரிட்டியாக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒண்ணே கால் வயதில் (15 மாதங்கள்) ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடன், குடும்ப வருமானம், வாழ்க்கை சூழ்நிலைக்காக வள்ளி தானும் ஏதாவது தொழில் செய்து குடும்பத்துக்கு வருமானம் சேர்க்க எண்ணினார். உபெர் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பெண்ணாக பணிக்குச் சேர்ந்தார்.
குழந்தையை பராமரிக்க யாரும் இல்லாததால் தன்னுடனேயே உடலில் குழந்தையைக் கட்டிக்கொண்டு கைக்குழந்தையுடன் அவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் படம் எடுத்து ட்விட்டரில் போட அவர் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்.
ஏழ்மை நிலையிலும் மனோ தைரியத்துடன் பணியாற்றும் வள்ளியின் சிரமங்களை இந்து தமிழ் திசை ஆன்லைன் பேட்டியில் வெளிக்கொணர்ந்து அவருக்கு உதவ முடிந்தவர்கள் உதவலாம் என தெரிவித்திருந்தோம். பேட்டியைப்படித்த திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி வள்ளிக்கு உதவி செய்ய நினைத்தார்.
இன்று காலை வள்ளியை தனது இல்லத்துக்கு வரவழைத்தார் கனிமொழி. அவரிடம் குடும்ப விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டுள்ளார். தனது குடும்ப நிலை, கணவர் தனியார் செக்யூரிட்டியாக நிரந்தரமற்ற பணியில் உள்ளதை தெரிவித்துள்ளார் வள்ளி.
இதுப்பற்றி வள்ளியிடம் கேட்டபோது அவர் கூறியது:
மேடம் அழைப்பதாக அவரது உதவியாளர் அழைத்தார், அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தேன் என்ன உதவி வேண்டும் என்று கேட்டார், எனக்கு நிரந்தரமான ஒரு வேலை அரசுத்துறையில் வாங்கிக்கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன், என் மகனையும் நன்றாக படிக்கவைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
நிரந்தர வேலை வாங்கிக்கொடுத்தால் உடனடியாக வேலைக்கு சேர முடியுமா என கேட்டார், நான் என் மகனை எங்கும் விட்டுச் செல்ல முடியாததால்தான் உபேர் உணவு சப்ளை வேலைக்கு செல்கிறேன், 7 மாதம் ஆனபின் ஏதாவது குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிடும் நிலைக்கு குழந்தை வளர்ந்தபின் வேறு வேலைக்கு நிச்சயம் செல்வேன் என தெரிவித்தேன்.
அப்படியானால் 7 மாதம் கழித்து கட்டாயம் என் உதவியாளர் மூலம் எனக்கு ஞாபகப்படுத்துங்கள் நான் நல்ல பணிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். பின்னர் குழந்தையை எங்கு பள்ளியில் சேர்க்கப்போகிறீர்கள் என்று கேட்டார், ‘நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல கல்வி கொடுக்கணும் மேடம் அதுதான் என் ஆசை’ என்றேன். பள்ளியில் சேர்க்கும்போது சொல்லுங்கள் கேந்திர வித்யாலயாவில் நான் சிபாரிசு செய்து சேர்த்து விடுகிறேன் என்றார்.
பின்னர் வயதான என் தாய் தந்தைக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று சொன்னேன். உடனடியாக அதுகுறித்த விவரங்களை உதவியாளரிடம் அளித்தால் அவர் அதற்கான உதவியை செய்வார் என்று தெரிவித்தார். எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்து எனக்கு ஒரு புடவையை பரிசாக கொடுத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஊடகத்தில் வந்த செய்தியைப் பார்த்து எனக்கு உதவவும், என் மகன் படிப்புக்கு உதவவும் அவர் முன் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
ஊடகத்தில் வந்த செய்தியை படித்து கடந்துச் செல்பவர்கள் மத்தியில் அதை படித்து உதவும் எண்ணம் சிலருக்கு மட்டுமே உண்டு, கனிமொழி இதுபோல் வெளியில் தெரியாமல் பலருக்கும் உதவி உள்ளார். இன்று வள்ளிக்கு அவர் உதவ அழைத்தும் உடனடியாக உதவ முடியாவிட்டாலும் நீண்டகால அவரது வாழ்வுக்கான உதவியாக 7 மாதம் கழித்து நல்ல பணியில் வள்ளி அமர்த்தப்படுவார் என்பது வள்ளியின் பேச்சில் தெரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT