Last Updated : 03 Jan, 2020 08:06 PM

 

Published : 03 Jan 2020 08:06 PM
Last Updated : 03 Jan 2020 08:06 PM

விருதுநகரில் 2 வாக்குகளில் வெற்றியை இழந்த வேட்பாளர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா

விருதுநகர்

விருதுநகரில் 2 வாக்குகளில் வெற்றியை இழந்த வேட்பாளர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர் மறு வாக்குப் பதிவு நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன். ஆவுடையாபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவர்,இன்று விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது 1,176 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதே பகுதியைச் சேர்ந்த நல்லமுகமது என்பவர் 1,178 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனால், சேதுராமனும் அவரது ஆதவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, நல்லமுகமது வெற்றியை நிறுத்திவைக்கக்கோரியும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணனை சந்தித்து இன்று சேதுராமனும் அவரது ஆதவாளர்கள் 100க்கு மேற்பட்டோரும் மனுக்கொடுக்க முயன்றனர். ஆனால், மனுவை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அதையடுத்து, சேதுராமனுடன் வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, வேட்பாளர் சேதுராமன் கூறுகையில், "எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 68 வாக்குகள் செல்லாதவை என்றும், நல்லமுகமதுவுக்கு 33 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால், தபால் ஒட்டுகள் சேர்க்கப்படவில்லை.

எனது குடும்பத்தினரே எனக்கு தபால் வாக்கு போட்டுள்ளனர். தபால் வாக்குகள் சேர்க்கப்பட்டிருந்தால் நான் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பேன். தபால் வாக்குகளை கணக்கில் சேர்க்காமல் வெற்றியை அறிவித்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, இதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x