Published : 03 Jan 2020 08:04 PM
Last Updated : 03 Jan 2020 08:04 PM
குடியுரிமைச் சட்டத்தால் தோல்வியடைவோம் எனத் தெரிந்தே அதிமுகவிற்காக என் மகளை, மகனை தேர்தல் களத்தில் இறக்கி தோல்வியை ஏற்றுக்கொண்டேன் என முன்னாள் எம்பி அன்வர்ராஜா தெரிவித்தார். குடியுரிமை சட்டம் தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், துணை முதல்வரிடம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்பி அன்வர்ராஜாவின் மகன், மகள் ஆகியோர் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியுற்றனர். இவர்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிட்டும், குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்கள் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்ததால் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் அ.அன்வர்ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் பெற்ற வெற்றிக்கிடையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றியை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.
நாடாளுமன்றத்தில் 18 சதவீத வாக்குகளை பெற்றோம். இப்போது 33 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே அதிமுக கிராமப்புறங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது உள்ள நம்பிக்கையை பெற்ற வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது என்பது இந்த வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி அடையும் வாய்ப்பு உள்ளது.
குடியுரிமைச் சட்டத்தால் அதிமுகவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் முழுமையாக குறைந்திருக்கிறது. உதாரணமாகத் தோற்றுவிடுவோம் எனத்தெரிந்தே எனது மகளை எனது சொந்த ஊரிலும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் யாரும் போட்டியிட முன்வராத நிலையில் அங்கு எனது மகனையும் நிறுத்தினேன்.
போர்க்களத்துக்கு போனால் தோல்வி நிச்சயம் என தெரிந்த நிலையில் உயிரிழந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் போர் வீரர்களை போல், அதிமுகவிற்காக என் மகனையும், மகளையும் தேர்தல் களத்திற்கு அனுப்பி தோல்வியை ஏற்றுக்கொண்டேன்.
குடியுரிமை சட்டத்தின் விளைவாக சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இது குறித்து துணை முதல்வரிடம் பேசியுள்ளேன். முதல்வர் பழனிச்சாமிக்கும் இச்சட்டம் குறித்து கடிதமாக அனுப்பியுள்ளேன்.
இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என்றால் இந்த கணக்கெடுப்பு அசாம் மாநிலத்துடன் நிற்க வேண்டும். ஆனால் அசாமை தாண்டி இந்தியா முழுமைக்கும் எடுக்கப்படும் என அமித்ஷா சொல்கிறார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு வந்தால் நிச்சயமாக இஸ்லாமியர்களை பாதிக்கும் என்பதுதான் உண்மை. குடியுரிமை சட்டத்தை நாங்கள் ஆதரித்தோம். அதே போல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்த மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்.
இச்சட்டத்தை முஸ்லிம்கள் அல்லாத மக்களும் எதிர்க்கின்றனர். முஸ்லீம்கள் தங்கள் வாழ்க்கை இச்சட்டத்தினால் பறிபோய் விடும் என்பதால் எதிர்க்கின்றனர். அப்படி இருக்கையில் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவுக்கு எப்படி வாக்களிப்பார்கள் எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...