Published : 03 Jan 2020 09:50 AM
Last Updated : 03 Jan 2020 09:50 AM
பொங்கல் திருவிழாவை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் நாட்டு வெல்லம் உற்பத்தியில் ஆலைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் கடகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில், கரும்பு வரத்துக்கு ஏற்ப ஆண்டு முழுக்க வெல்லம் உற்பத்தி நடந்து வருகிறது.
பொங்கல் விழா நெருங்கி வரும் வேளையில் தருமபுரி மாவட்ட கரும்பு ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் மத்தியில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு காரணமாக ரசாயனம் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி அடுத்த கடகத்தூர் முத்துக்கவுண்டன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கரும்பு ஆலை உரிமையாளர் சின்னசாமி விவசாய கரும்பு வெல்லம் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் பொருளாளராக உள்ளார். மேலும், ரசாயன கலப்பில்லாத நாட்டு வெல்லம் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வெல்ல உற்பத்தி குறித்து அவர் கூறியது:
உள்ளூரில் இன்று கரும்பு 1 டன் ரூ.2300-க்கு வாங்கி வருகிறோம். 1 டன் கரும்பில் இருந்து சுமார் 110 கிலோ வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கிடைக்கும். ஆனால், வறட்சி காரணமாக உள்ளூரில் கரும்பு விளைச்சல் மிகவும் பாதிப்படைந்து விட்டது.
எனவே, கர்நாடகா மாநில மைசூர் அடுத்த மாண்டியா பகுதியில் இருந்து தான் கரும்பு வாங்கி வருகிறோம். அங்கு ஒரு டன் கரும்புக்கு விவசாயிக்கு ரூ.1500 முதல் ரூ.1700 வரை தான் விலை தருகிறோம். ஆனால், வெட்டுக் கூலி, வாகன செலவு ஆகியவற்றால், ஆலைக்கு கரும்பு வந்து சேரும்போது ஒரு டன்னுக்கு ரூ.3400 வரை விலை எகிறி விடுகிறது. அங்கிருந்து வாங்கி வரப்படும் கரும்பில் 1 டன்னில் இருந்து 95 கிலோ வெல்லம் மட்டுமே கிடைக்கும். இருப்பினும் தொழிலை கைவிட முடியாத சூழலால் சமாளித்து வருகிறோம்.
இதற்கிடையில் சமீப காலமாக மக்கள் மத்தியில் ரசாயன கலப்பு இல்லாத வெல்லம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொங்கல் விழா நெருங்கி வரும் நிலையில் தீவிரமாக வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆலையிலும் நாள் ஒன்றுக்கு 1 டன் வீதம் கரும்பு அரவை செய்கிறோம். பாரம்பரிய முறைப்படி, ரசாயனம் பயன்படுத்தாமல் வெல்லம் தயாரிக்கும்போது எங்களுக்கு உற்பத்தி செலவும், தேவையற்ற அலைச்சல், அச்சம் போன்ற பிரச்சினைகளும் குறைகிறது. வெல்லத்தை நுகர்வோரின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
உற்பத்தி செய்யும் எங்களுக்கும் மனநிறைவு ஏற்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தற்போது விலை நிலவரம் கிலோ ரூ.43 முதல் ரூ.45 வரை விற்பனை ஆகிறது. ரசாயன கலப்பில்லாத வெல்லத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம். நுகர்வோர் முழுமையாக இந்த வகை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைக்கு ஆதரவு அளித்தால் தான் தொழில் நசிந்து விடாமல் தொடர்ந்து நடக்கும். மேலும், அரசு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அந்த பரிசுத் தொகுப்பில் ரசாயன கலப்பற்ற நாட்டு வெல்லத்தை சேர்த்து வழங்கி நாட்டு வெல்லம் உற்பத்தி தொழிலை காத்திட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT