Published : 03 Jan 2020 09:59 AM
Last Updated : 03 Jan 2020 09:59 AM
கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலாக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஜோதிமணி செந்தில்பாலாஜி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கி (ஜன.2) இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது. இன்று (ஜன.3) காலையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில் 1 மற்றும் 16-வது வார்டுகளில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், முடிவுகளை அறிவிக்கவில்லை. இரவு 2 மணிக்கு மேல் காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் தலைமையில் போலீஸாரை குவித்து, மேற்கண்ட இரு வார்டுகள் உள்ளிட்ட 9 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றதாகவும் 8 இடங்களில் திமுக வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர்.
இதனால் வாக்கு எண்ணும் மையமான க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் தேர்தல் முடிவுகள் மாற்றி அறிவித்ததை கண்டித்து, இன்று காலை முதல், தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
1-வது வார்டில் திமுக வேட்பாளர் குணசேகரன் மற்றும் 16-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்ற நிலையில், 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சரவணகுமார், 16-வது வார்டில் அதிமுக வேட்பாளர் கலையரசி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்தவரை தேர்வு செய்வதற்காக திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றியை மாற்றி, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment