Published : 03 Jan 2020 07:49 AM
Last Updated : 03 Jan 2020 07:49 AM

பண்டிகை, விடுமுறை தினங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு

சென்னை

பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் ஏரி, குளம், அருவி, கடல் போன்ற நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் பிப்.3-க்குள் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோட்டீஸ்வரி என்பவர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஆழம் தெரியாத நீர்நிலைகள் மற்றும் பயன்பாடு இல்லாத கல்குவாரிகளின் நீர்தேக்கங்களில் குளிக்கச் செல்பவர்களும், மெரினா, ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடற்கரைகளில் சீற்றம் தெரியாமல் குளிக்கச் செல்பவர்களும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்து வருகிறது.

செல்ஃபி எடுக்கும்போது சிலர் நீரில் சிக்கி இறந்துள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,884 ஆக உள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சிகரமானது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே கடற்கரை ஓரங்கள், சுற்றுலாத் தலங்களில் உள்ள நீர்நிலைகள், கோயில் குளங்கள், அருவிகள் போன்றவற்றில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற கடலோரக் காவல் படை வீரர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும்.

அடிக்கடி மரணம் விளைவிக்கும் நீர்நிலைகளை அடையாளம் கண்டு ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்த வேண்டும். சென்னையில் சுனாமி தாக்கியபோது கடல் சீற்றம் அதிகம் உள்ள சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை தடுப்புச் சுவர் அமைக்க, உலக வங்கி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் இன்னும் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. எனவே முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த டிசம்பரில் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை பிப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதற்குள் உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, பொங்கல் பண்டிகை விடுமுறை நெருங்குவதால் நீர்நிலைகளை நாடிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். அதற்கு நீதிபதிகள், தமிழக அரசு எப்போதும் போல உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x