Published : 02 Jan 2020 02:44 PM
Last Updated : 02 Jan 2020 02:44 PM
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்கரைப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக திமுக வேட்பாளர் லட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியம், மாவட்டக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் கடந்த டிச.27-ல் நடந்தது.
மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,555 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,467 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.14 சதவீத வாக்குகள் பதிவாயின.
மதுரை வேளாண் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்கரைப்பட்டி பஞ்சாயத்து தலைவராக திமுக வேட்பாளர் லட்சுமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வெற்றிச் சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.
லட்சுமி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் வீரண்ணா மாங்குளம் ஊராட்சியில் கிளர்க்காக உள்ளார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். ஒரே வீட்டில் கணவர் அதிமுக, மனைவி திமுக என இருவரும் வெவ்வேறு கட்சியில் இருந்து கொண்டு பஞ்சாயத்து பதவியில் இருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும் இந்த பஞ்சாயத்திற்குப் போட்டியிட்ட 5 பேரில் லட்சுமி மட்டுமே தேர்தலுக்குப் புதியவர். மற்ற நான்கு பேரும் ஏற்கெனவே தேர்தல் களம் கண்டவர்கள். சிலர் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமி 137 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற லட்சுமி, தனது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன், சாலை வசதி மேம்படுத்தித்தருவேன் என உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT